

சுனாமிக்கு சரியாக 40 ஆண்டுகள் முந்தைய தனுஷ்கோடியின் அழிவு இன்று பலராலும் மறக்கப்பட்டுவிட்டது. கடல் கொண்ட தென்னாடு என்று நாம் வரலாற்றுப் புத்தகங்களில் மட்டுமே படித்திருக்கிறோம். அதை தனுஷ்கோடியின் கோர அழிவு நமது கண்ணெதிரே நிரூபித்தது. ஜோ டி குரூஸ் எழுதிய 'ஆழி சூழ் உலகு' நாவலில் தனுஷ்கோடியின் அழிவை மிக கச்சிதமாகப் படம்பிடித்துள்ளார்.
அப்போதும்கூட நமது வெகுஜன மனம் அன்றைக்கு தனுஷ்கோடியில் படப்பிடிப்பில் இருந்த ஜெமினிகணேசன் - சாவித்திரி ஜோடி என்னானது? என்ற தவிப்பில்தான் இருந்தது. ஆனால், அவர்கள் இருவரும் பத்திரமாக மீண்டனர்.
50 ஆண்டுகளுக்குப் பின்னான இன்றைய நவீன உலகின் இயற்கைப் பேரிடர்களையே சமாளிக்க முடியாமல் திண்டாடும் நாம்... அன்றைய தனுஷ்கோடியின் அழிவை எவ்வாறு எதிர்கொண்டிருப்போம் என்பதே பெரும் கேள்விக்குறியாக இருக்கிறது. கடலின் வாசனையைத் தனது உயிர்மூச்சாகக் கொண்டு வாழ்ந்துவரும் மீனவர்களின் துயரம் எப்போதும்போலவே ஆறாத ரணமாக இன்றுவரை இருந்துவருகிறது. அதைத் தனது ஒவ்வொரு கட்டுரையிலும் மிக ஆழமாக எழுதிவருகிறார் கட்டுரையாளர். அவருக்கு நமது பாராட்டுகள்.
- கே எஸ் முகமத் ஷூஐப், காயல்பட்டினம்