

புதிய நிதி அமைச்சருக்கு வேண்டுகோள்…
நமது நாட்டில் செலவினங்களைக் கட்டுப்படுத்தப் பல வழிகள் உள்ளன. நிதியமைச்சர் உடனடியாக ஒர் ஆணை பிறப்பிக்க வேண்டும். அனைத்து மாநிலங்களும், பொதுத் துறை நிறுவனங்களும் பின்பற்றும் வகையில் இது இருக்க வேண்டும். அதாவது, மின்னணு மற்றும் தகவல்தொடர்பு வளர்ச்சியினை முழுதாகப் பயன்படுத்தினால் பல கோடிகள் மிச்சமாகும். முன்னுதாரணமாக முதல்வர் ஜெயலலிதா பல நிகழ்ச்சிகளைக் காணொளித் தொலைக்காட்சி மூலமே நடத்திவருகிறார். அரசு மற்றும் பொதுத் துறை அதிகாரிகள் ‘ஆன் டியூட்டி’ என்று ரயிலில் ஏ.சி வகுப்பிலும், விமானத்திலும் பறந்து, நட்சத்திர ஹோட்டல்களில் தங்கிக்கொண்டு (அல்லது தங்குவதாக ஆவணங்கள் மட்டும் தயாரித்துக்கொண்டு) ரூபாய்களை விழுங்கிவருகின்றனர். இவ்வளவு விஞ்ஞான முன்னேற்றம் உள்ள நாட்டில், நாட்டின் எந்த மூலையில் இருக்கும் ஒரு அதிகாரியும் மற்ற அதிகாரியைத் தொடர்புகொள்ள வீடியோ கான்பரன்ஸ் வசதி உள்ளது. அதன் மூலம் கருத்துகளைப் பரிமாறிக்கொள்ளலாம். ஆவணங்களைக் காட்டலாம், ஆராய்ச்சி செய்யலாம். இது முடியாதா என்ன? இது யார் கண்ணிலும் இதுவரை படவில்லையா. இந்த வகை செலவுகளைக் குறைத்தால், பல கோடிகள் மிச்சமாகும், பயணிகளுக்கும் ரயில், விமானங்களில் இடம் கிடைக்கும்.
செய்வீர்களா… நிதியமைச்சரே நீங்கள் செய்வீர்களா?
- சீதாராமன், மின்னஞ்சல் வழியாக…