

புதுமடம் ஜாபர் அலி எழுதிய ‘சாலையோர உணவுக் கடைகள்: கட்டுப்பாடு அவசியம்’ (மார்ச் 3) கட்டுரையை வாசித்தேன். எளிய மக்களின் உடல் நலன் கருதி அக்கறையுடன் எழுதப்பட்டுள்ளதாக நினைக்கிறேன். ஆனால், அதன் உள்ளீடோ சில அம்சங்களைப் பார்க்கத் தவறியிருக்கிறது.
இருக்கும் காசில் பசியைப் போக்கும் இடமாகவே சாலையோர உணவகங்கள் திகழ்கின்றன. எளிய மக்களிடம் வாங்கும் சக்தி இல்லாதவரை இதுபோன்ற உணவகங்களைத் தவிர்க்கவே முடியாது.
சுத்தம் என்று எடுத்துக்கொண்டால், பல பெரிய உணவகங்களின் சமையலறையைத் திறந்து பார்த்தால் அங்கும் இதேபோன்ற நிலைதான் என்பது புரியும். பல நேரடிச் சோதனைகள் இதை எடுத்துக்காட்டியுள்ளன. உள்ளாட்சி அமைப்புகள் சாலையோர உணவுக் கடைகளுக்கு ஏற்கெனவே ஏகப்பட்ட கெடுபிடிகளை ஏற்படுத்திவருகின்றன.
அவற்றுக்குப் பணம் பார்க்கும் நோக்கம்தானே தவிர, மக்கள் மீதான அக்கறை ஒன்றும் கிடையாது. இந்நிலையில் கட்டுரை வழங்கியுள்ள ஆலோசனை, அந்த அர்த்தமற்ற கெடுபிடிகளுக்குத்தான் கூடுதல் வலுசேர்க்கும்.
எளிய மக்கள் தங்களின் வாழ்க்கைப் பாட்டுக்காகவே சாலையோர உணவகங்களை நடத்துகின்றனர். தங்களிடம் உள்ள குறைந்தபட்சப் பணத்தில் தங்களின் வயிற்றை நிரப்பிக்கொள்ள மற்ற எளிய மக்கள் அங்கு செல்கின்றனர்.
ஆரோக்கியமற்ற பொருள்கள்தான் அங்கு பயன்படுத்தப்படுகிறது என்று கட்டுரை முன்வைக்கும் குற்றச்சாட்டை, அப்படியே எல்லா கடைகளுக்கும் பொதுமைப்படுத்திவிட முடியாது. இந்தக் குற்றச்சாட்டு பெரும்பாலான பெரிய கடைகளுக்கும் பொருந்தும்.
- ச.லெனின் | மின்னஞ்சல் வழியாக...