

‘என் மகள் இன்றைக்கு அரசுப் பள்ளி மாணவி’என்று தனது அனுபவத்தைக் கட்டுரையாக்கிய அ.வெண்ணிலாவை வணங்குகிறேன். உங்கள் மகள் கல்வி பயில ஏற்ற இடம் அரசுப் பள்ளிதான் என்று முடிவெடுத்தமைக்குப் பாராட்டுகள். 14 வயதில் விடுதி வாழ்க்கையா என்று கேள்வி எழுப்பிக்கொண்ட உங்களின் பொறுப்புணர்ச்சிக்கு மீண்டும் ஒரு வணக்கம்.
மேற்குத் தமிழகக் கல்வி வணிகம் பற்றி ரத்தினச் சுருக்கமாகக் கூறியுள்ளீர்கள். ‘அங்கு கொடுக்கப்படும் சாப்பாடு, நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகள், இரண்டு ஆண்டுகளில் மாணவர்களுக்குத் தரப்படும் மன நெருக்கடிகள், அங்கு நடக்கும் மாணவர்களின் தற்கொலைகள்’ இவைபற்றி உங்களுக்கு ஏற்பட்ட ’இந்தப் பள்ளிகளே வேண்டாம்’, மதிப்பெண் அறுவடை’ போன்ற உணர்ச்சிகளை வரவேற்கிறேன். இவையெல்லாம், தமிழகத்துப் பெற்றோர்கள், குறிப்பாகக் கல்வியாளர்கள், அரசாங்கம் ஆகியோரிடம் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லையே என்று வருந்துகிறேன். அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுவரும் அவலத்தைத் நீக்க ஒரு துரும்பை எடுத்துப்போட்டிருக்கிறீர்கள், ராமாயண அணில்போல.
- அ.த. பன்னீர்செல்வம், பட்டுக்கோட்டை.