

‘வட இந்தியத் தொழிலாளர்களின் வருகை: வரமா, சாபமா?’ (பிப்ரவரி 16) கட்டுரையில் பல ஆக்கபூர்வமான கருத்துகளைப் பதிவுசெய்திருந்தார் கட்டுரையாளர் சட்வா தங்கராசு. ஆனால், அதற்கு நேர்மாறாக மறுநாளே, ‘வட இந்தியர் வருகையும் அரசின் கடமையும்’ எனும் தலைப்பில் வெளியான எதிர்வினை மிகுந்த ஏமாற்றம் தருவதாக இருந்தது.
வட இந்தியர்களும் இந்தியர்கள்தான். அவர்கள், இங்கு வருவதே பெரிய குற்றம்போல் குறிப்பிடுவது இந்திய அரசமைப்புக்கே விரோதமானதாகும். குறைந்த கூலிக்கு, நேரம் காலம் பார்க்காமல் உழைத்து நைந்துபோன உடம்புக்கு வலி நிவாரணிகளுடன் உறங்கச் செல்லும் ஏழை எளிய உழைக்கும் மக்களைக் குற்றவாளிகள்போல் சித்தரிப்பது சரியல்ல.
குறைந்த கூலிக்கு ஆட்களை நியமிப்பது முதலாளிகள்தான். ‘குறைந்தபட்சக் கூலி’ என்பதைக் காகித அளவில் மட்டுமே அரசு வைத்துள்ளது. இதுவே உள்ளூர் தொழிலாளர்களின் வேலையைப் பறிக்கிறது. இந்த வேலைக்குக் குறைந்தபட்சம் இவ்வளவு கூலி என்பதை அரசு கட்டாயமாக்கினால், வட இந்தியத் தொழிலாளிகளை எப்படி முதலாளி குறைந்த கூலிக்கு அமர்த்துவார்? கேரளத்தில், ஒவ்வொரு முறைசாராத் தொழிலாளிக்கும் இந்த இந்த வேலைக்கு என்ன கூலி என்கிற சட்டம் உள்ளது.
உள்ளூர் தொழிலாளியோ, வெளிமாநிலத் தொழிலாளியோ யாராக இருந்தாலும், அவர்களுக்குக் குறைந்தபட்சக் கூலி என்பதை அரசு உத்தரவாதம் செய்ய வேண்டும். அவர்களுக்கான இருப்பிடம், சுகாதாரம், குழந்தைகளின் கல்வி, பெண்களின் பாதுகாப்பு போன்றவற்றை அக்கறையுடன் அணுகிட வேண்டும்.
- ச.லெனின் | சென்னை.