

சிவாஜி கணேசனின் நடிப்பைப் பற்றிய கட்டுரையில் ‘தெய்வ மகன்’ படத்தில் சிவாஜியின் முதுகுகூட நடிக்கும் என்ற பொருள்பட ஒரு காட்சி குறிப்பிடப்பட்டிருந்தது. அது எனக்கு அவரின் மற்றொரு படமான ‘ஞானஒளி’யின் உணர்ச்சிமயமான காட்சியை நினைவுபடுத்தியது.
தவறிழைத்த மகளின் திருமணத்தை போலீஸ் நண்பன் நடத்திவைக்க, தன்னுடைய எதிர்பார்ப்புகளெல்லாம் பொய்த்துப்போன நிலையில், அந்தத் திருமணத்தை அங்கீகரிக்கவும் - நிராகரிக்கவும் மனமில்லாமல் வேறுபுறம் கேமராவுக்கு முதுகைக் காட்டியபடி நிலையில் நிற்க வேண்டிய காட்சி அது. கேமராவின் அருகில் ஸ்ரீகாந்த், சாரதா மற்றும் மேஜர் சுந்தர்ராஜன் ஆகியோர் இருக்கும்படியான திரைக்காட்சி.
சிவாஜி சிறிது தொலைவில் கேமராவுக்கு முதுகைக் காட்டியபடி நின்றிருப்பார். சுற்றிலும் இயற்கையும் மழையும் மின்னலும் காற்றுமாகக் கொந்தளித்துக்கொண்டிருக்கும். முதுகைக் காட்டிக்கொண்டிருந்தவர் சும்மா நின்றுகொண்டிருக்கலாம், யாரும் அவரைக் கவனிக்கப்போவதில்லை.
ஏனென்றால், கேமரா மற்ற மூவரை மட்டுமே மையப்படுத்தியிருக்கும். பின்னால் அவரின் முதுகு மட்டுமே தெரியும். ஆனால், ரசிகர்களுக்கு அவர் குமுறிக் குமுறி அழுவது முதுகின் அசைவின் மூலம் தெரியும். மொத்தக் காட்சியையும் அவரது அந்த அசைவு தூக்கி நிறுத்தக்கூடியதாக அமைந்தது, அவரது நடிப்பின் மேதமையைத்தான் காட்டுகிறது.
இதேபோல் மற்றொரு காட்சி ‘பதிபக்தி’ திரைப்படத்திலும் வருகிறது. பழைய நினைவுகளைக் கிளறியதற்கு நன்றி!
- சிவகுமார், மின்னஞ்சல் வழியாக…