

மார்செல்லோ முஸ்ட்டோவின் நூலை முன்வைத்து செ.இளவேனில் எழுதிய ‘போர்களுக்கு எதிரானதே பொதுவுடைமை அரசியல்’ (‘இந்து தமிழ் திசை’ 07.05.22) கட்டுரையைப் படித்தேன். ‘உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துவரும் போரை விமர்சிப்பதில், இந்தியாவில் இயங்கிவரும் பொதுவுடைமை அமைப்புகளிடம் உள்ளார்ந்த தயக்கம் நிலவிவருகிறது. போர் ஓய வேண்டும் என்று உதட்டளவில் பேசினாலும் உள்ளத்தில் ரஷ்ய ஆதரவே நிறைந்திருக்கிறது’ என்கிறார்.
‘அமைதியே பிரதானமானது’ என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மிகத் தெளிவாகவே தனது நிலையைக் கூறியுள்ளது. தற்போது ரஷ்யாவும் முதலாளித்துவ நாடுதான். அமெரிக்க ஏகாதிபத்தியமும் ரஷ்யாவும் மார்க்சியம் கூறுவதுபோல் ஏகாதிபத்தியங்களுக்கு இடையேயான முரண்பாட்டின்படி மோதுகின்றன.
அதில், அப்பாவி மக்கள் பாதிக்கப்படுகின்றனர். வர்த்தகப் போர், முதலாளிகளின் நலன், லாபம் சார்ந்த ஏகாதிபத்தியக் கணக்குகளுக்கு உட்பட்ட பூகோள அரசியல் என எல்லாம் இதில் அடங்கும். இந்தப் புரிதலிலிருந்துதான் இப்போதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ரஷ்யா-உக்ரைன் போரைப் பார்க்கிறது. இடதுசாரிகள் போருக்கு எதிரானவர்கள்தான். அதற்கு மாறான நிலைப்பாட்டுடன் மார்க்சிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரிகளைச் சித்தரிப்பதாக இளவேனில் கட்டுரை உள்ளது என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
- ச.லெனின், சிபிஐ (எம்), தென்சென்னை மாவட்டச் செயற்குழு உறுப்பினர்.