

‘தடுப்பூசி போட்டுக்கொள்வதற்குக் கட்டாயப்படுத்தக் கூடாது’ என்ற நீதிமன்ற ஆணை மறுஆய்வுக்குரியது. தடுப்பூசிகள் வந்த காலம்தொட்டு, ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் கருத்துகள் தெரிவிப்பதுடன் போராட்டங்களும் நடைபெற்றிருக்கின்றன. அம்மை நோயால் ஆயிரக்கணக்கானோர் மாண்டனர். அந்நிலையை மாற்றி, அம்மை நோயை முழுமையாக ஒழித்துக்கட்டியது தடுப்பூசிகளே. தடுப்பூசி போடாததால் பொதுமக்களுக்கு நோய் ஆபத்து உண்டாகும். பொதுச் சுகாதாரத்தைச் செயல்படுத்துவது ஒட்டுமொத்த சமூகத்தின் நலனுக்கே.
- ச.சீ.இராஜகோபாலன், மூத்த கல்வியாளர்.
தமிழ்நாடே முன்மாதிரிதான்!
முகம்மது ரியாஸ் எழுதிய ‘வாலாஜா பள்ளிவாசலும் சிந்தி இந்துக்களும்: நல்லிணக்கத்தின் தமிழ்நாட்டு மாதிரி!’ (‘இந்து தமிழ் திசை’, 28.04.22) கட்டுரை படித்தேன். நாகூர் தர்கா இப்போதும் சரிசமமாக இந்துக்களும் வழிபடும் தலமாகும். ஆண்டுதோறும் சந்தனம் பூசும் வைபவத்துக்கு ஒரு செட்டியார் குடும்பத்திலிருந்துதான் சந்தனக் குடம் செல்கிறது. சென்னை கே.கே. நகரில் இஸ்லாமியர் ஒருவர் நடத்தும் நாட்டு மருந்துக் கடையில்தான் இந்துக்கள் பூஜைப் பொருட்களை வாங்கிச் செல்கிறார்கள். எப்போதாவது, சில அசம்பாவிதங்கள் நடைபெற்றாலும் பண்டிகைகள்தோறும் பலகாரங்களைப் பரிமாறிக்கொள்ளும் சகோதரத்துவம் தொடர்வதும் பெருமைக்குரிய விஷயம். வாலாஜா பள்ளிவாசல் மட்டுமல்ல, தமிழ்நாடே நல்லிணக்கத்துக்கான முன்மாதிரி மாநிலமாகும்.
- அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை, நாகப்பட்டினம் மாவட்டம்.