

‘டிஜிட்டல் முறைக்கு மாறும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு’ என்ற தலையங்கத்தை (‘இந்து தமிழ் திசை’, 15.03.2021) படித்தேன். கடைசி பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதுபோல மக்கள்தொகைக் கணக்கெடுப்பு என்பது ஏதோ கடமைக்கு என்றில்லாமல், அதன் பின்விளைவுகளையும் அல்லது பின்னால் செய்யப்போகும் திட்டங்களுக்கு எவ்வாறு அது உதவப்போகிறது என்பதையும் உணர்ந்து செய்ய வேண்டிய மிக முக்கியமான பணியாகும். கணக்கெடுப்பாளர்கள் இதனைக் கருத்தில் கொண்டு இப்பணியைச் செவ்வனே செய்ய அரசு தேவையான அனைத்து வசதிகளையும் செய்துகொடுக்க வேண்டும்.
அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பணிச்சுமை இல்லாதவாறு அவர்களை இப்பணியைச் செய்யவைக்க வேண்டும். அலுவலகத்திலோ பள்ளியிலோ அதிகப் பணியைக் கொடுத்துவிட்டு, மக்கள்தொகைக் கணக்கெடுப்புப் பணியும் அளித்தால் உடற்சோர்வில் இப்பணி கண்டிப்பாகச் சரியாக நடக்காது. இதற்கான முன்னெடுப்புகளை ஒன்றிய, மாநில அரசுகள் செய்ய வேண்டும். என்னதான் அரசு இப்பணியை டிஜிட்டல்மயமாக்கினாலும் மக்கள் தங்களின் கடமையைச் சரியாகச் செய்தால்தான் இந்த டிஜிட்டல் முறை பலனளிக்கும். இந்த டிஜிட்டல் முறையில் ஏற்படக்கூடிய தவறுகளை முதலிலேயே யோசித்து, அவற்றைச் சரிசெய்த பின் வெளியிட வேண்டும். மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் மூலமாகத்தான் மிக முக்கியமான தரவுகளை அரசு பெற முடியும். இந்தத் தரவுகள் மிகவும் முக்கியமானவை என்பதை உணர்ந்து, இப்பணியில் ஈடுபடும் அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்றினால்தான் நல்ல பலன் கிடைக்கும்.
- வீ.சக்திவேல், தே.கல்லுப்பட்டி.