‘இந்து தமிழ் திசை’ கட்டுரையும் முதல்வர் அறிவிப்பும்!

‘இந்து தமிழ் திசை’ கட்டுரையும் முதல்வர் அறிவிப்பும்!
Updated on
1 min read

தமிழகத்தில் மாபெரும் புத்தகப் பூங்கா அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருப்பது புத்தகக் காதலர்களிடையே பெருமகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தப் புத்தகப் பூங்காவில் அனைத்து நூல்களும் இருக்கும்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் கூறியிருக்கிறார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (13.03.22) ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் சூ.ம.ஜெயசீலன் ‘குழந்தைகளுக்காகத் திட்டமிடுவோம்!’ என்ற கட்டுரை எழுதியிருந்தார். அதில் இப்படிக் குறிப்பிட்டிருந்தார்: “…மாவட்டத் தலைநகரங்களில் இலக்கியப் பூங்காக்கள் அமைக்கலாம். இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தின் தொடர்ச்சியாகக் குழந்தைகளுக்கான புத்தகங்களுடன் கூடிய கிராம அல்லது வீதி நூலகங்களைத் தொடங்கலாம்.”

இந்தக் கட்டுரை வெளியாகி இரண்டு நாட்களுக்குள் முதல்வரிடமிருந்து இப்படியொரு அறிவிப்பு வந்திருப்பது ‘இந்து தமிழ் திசை’ வாசகியான எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. தொடர்ந்து ‘இந்து தமிழ் திசை’யின் கட்டுரைகளையும் செய்திகளையும் முதல்வர் கவனித்துத் தகுந்த நடவடிக்கைகளை எடுத்துவருகிறார். அதன் தொடர்ச்சியாகவே இந்த அறிவிப்பையும் கருத வேண்டியிருக்கிறது.

இந்தத் திட்டத்தைத் தொடக்கப் புள்ளியாகக் கொண்டு, ஒரே ஒரு இடத்தில் மட்டுமல்லாமல் எல்லா மாவட்டங்களிலும் இலக்கியப் பூங்காக்கள் உருவாக்க வேண்டும். குழந்தைகளுக்குப் புத்தக வாசிப்பை அறிமுகப்படுத்துவதாக இந்த இலக்கியப் பூங்காக்கள் இருக்க வேண்டும். புத்தக வாசிப்பின் மூலமே ஒரு சமூகத்தால் புதுப் புது சிந்தனைகளையும் புதுப் புதுக் கண்டுபிடிப்புகளையும் செய்ய முடியும். அதற்கு இந்த அறிவிப்பு ஒரு விதையாக இருக்கட்டும்.

- அமுதா, திருநெல்வேலி.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in