

ஆசை எழுதிய ‘ஒற்றைக் கால் மைனாவும் கரை ஒதுங்கிய குழந்தையும்’ கட்டுரை மனதைக் கனக்கச் செய்தது. புகலிடம் தேடும் போராட்டத்தில் அந்தச் சிறுவன் கடலில் விழுந்து கரையோரமாக ஒதுங்கிய சம்பவம், மனிதத்தன்மைக்கு வைக்கப்பட்ட மலர்வளையமாகும். மனிதர்களை மனிதர்களே அகதிகளாக்குவதென்பது கற்பனைக்கும் எட்டாத அநாகரிகத்தின் உச்சம் என்றே சொல்ல வேண்டும்.
எத்தனையோ நாடுகள் அகதிகளை அனுமதிக்காமல் தங்கள் கதவுகளை மூடியபோது, இந்த இளம் குருத்தின் விழி மூடியது. சிறுவனின் விழி மூடியபோது, மூடியிருந்த கதவுகள் எல்லாம் தானாகவே திறந்துகொண்டன. மலர்கள் என்பது ஆராதிக்க, அலங்கரிக்க, அழகாக்க என்ற நிலையை மாற்றி மலர்கள் என்றாலே மலர் வளையங்கள்தான் என்ற நிலையை ஏற்படுத்தியிருப்பதுதான் மனிதர்களின் மகத்தான சாதனையோ?
- ஜே. லூர்து, மதுரை.