

கே.கே. மகேஷ் எழுதிய ‘மேலூர்ல சில கிரானைட் குவாரிக இருந்துச்சாம்…’ எனும் கட்டுரை நகைச்சுவையான மொழியில் எழுதப்பட்டிருந்தாலும், இன்றைய தேதிக்கு விஸ்வரூபமெடுத்து நிற்கும் பிரச்சினையைப் பற்றி அற்புதமாக அலசப்பட்டிருக்கிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி கிடைக்கவும், குற்றம் செய்தவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்பட தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். இந்தக் கட்டுரைக்கு அருகிலேயே பிரசுரமாகியிருக்கும், ‘மேலே வரும் எலும்புகள்’ எனும் ஒரு நிமிடக் கட்டுரை, கவிதை வரிகளுக்குப் பின்னால் இருக்கும் விஷயங்களைச் சுட்டிக்காட்டியது. கடைசியில் அதுவும் மதுரையில் நடந்த மற்றொரு பயங்கர சம்பவத்தை அழகாகப் பதிவு செய்திருந்ததை உணர முடிந்தது.
- ஆர். செல்வகுமார், சென்னை.
கோடிகளில் புரளும் கிரானைட் கொள்ளையைத் தடுக்க முயன்ற நேர்மையான அதிகாரிக்குக் கிடைத்த சன்மானம் வழக்கம்போல பணியிடமாறுதல். இதில் அதிர்ச்சி இல்லை என்றாலும், ஒரு ஆட்சியருக்கே இந்த நிலைமை என்றால், புகார் கொடுக்க நினைக்கும் பாமர மக்கள் நிலைமை? அவர்கள் தோண்டிப்போட்ட ஆறு, குளம், கால்வாய் எல்லாமே விவசாயத்தைக் கேள்விக்குறியாக்கியது. அரசு மற்றும் அரசாங்க அதிகாரிகள் தத்தம் தம் கடமைகளை அலட்சியம் இன்றி சரிவரச் செய்தால் மட்டுமே இது போன்ற குற்றச்செயல் நடைபெறாமல் தடுக்க முடியும்.
- ப.தங்கவேல், திருக்குறுங்குடி.