

மக்கள் ஜனாதிபதி அப்துல் கலாமின் மறைவையொட்டி, கடந்த சில நாட்களாகப் படித்ததும், பார்த்ததும், கேட்டதுமான செய்திகள் எண்ணிலடங்கா. ஒவ்வொரு செய்தியும் நம்மை வியப்பின் உச்சிக்கே அழைத்துச் சென்றது. இது உண்மையா? எப்படி இப்படி ஒருவர் நேர்மையுடனும் மனித நேயத்துடனும் எளிமையாகவும் வாழ முடிந்தது? அவருக்கு மட்டும் இது நடைமுறை வாழ்வில் எப்படிச் சாத்தியமானது? இதுபோன்று ஆயிரம் கேள்விகள் மனதில். அனைத்துக்கும் ஆதாரங்களுடன் வெளியாகும் அவருடைய வாழ்க்கை வரலாறுகளே சான்று பகர்கின்றன! வருங்காலத்திலாவது நம் அரசியல்வாதிகள், கலாமின் வாழ்க்கை முறையை ஏற்று வாழ்ந்தாலே, அவரின் லட்சியமான ‘இந்தியா 2020’ சாத்தியமாகும்.
- ஜேவி, சென்னை.
மக்களின் பேரபிமானத்தைப் பெற்ற அப்துல் கலாம் மறைந்தது மிகப் பெரிய இழப்பு. எனினும், அவருக்கு அஞ்சலி செலுத்துவதுடன் நமது பணி முடிந்துவிடாது. அவரது அறிவு, உழைப்பு போன்றவை அவரது உயர்வுக்குக் காரணமாக இருந்தாலும், எல்லாவற்றுக்கும் மேலாக, அவரது ஒழுக்கம்தான் முதலில் நிற்கிறது. அந்தத் தனி மனித ஒழுக்கம்தான் எளிமை, பொது வாழ்வில் தூய்மை, சகிப்புத்தன்மை, பிற மதங்களை மதிக்கும் பண்பாடு, அடக்கம் என பல வடிவங்களில் அவரிடம் வெளிப்பட்டது. இதற்கு அவர் கற்ற கல்வியும் சூழலும் அவருக்குத் துணை நின்றன. அவரது உயர்வுக்குக் காரணமான விஷயங் கள் நமது அடுத்த தலைமுறையினருக்கும் சென்று சேர வேண்டும். அதன் மூலம் அவர் கனவு கண்ட வளமான எதிர்காலம் உருவாகும்.
- ஏ.எம்.நூர்தீன், சோளிங்கர்.