

மெட்ராஸை விட்டு அமெரிக்காவில் குடியேறி 20 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிறது. இதைப் படிக்கும்போது பழைய ஞாபகங்கள் கிளர்ந்தெழுகின்றன. சென்னை என்று அதிகாரபூர் வமாகப் பெயர் மாற்றியிருந்தாலும், சட்டென மெட்ராஸ் என்றுதான் வருகிறது. தூய்மையான கூவம் கனவாகவே இருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது. கூவம் தூய்மையடையும்போது மிகுந்த சந்தோஷப்படுகிறவர்களில் நானும் ஒருவனாக இருப்பேன்.
***
சீயான், இணையதளம் வழியாக…
சென்னைக் காற்றில் நீர்ப்பதம் அதிகம். காரணம், கடல் காற்று மற்றும் சீதோஷ்ண நிலைதான். அதிக நீர் காற்றில் இருக்கும்போது நம்மால் வெப்பத்தை அதிகமாக உணர முடியும். பெங்களூருக்கும் சென்னைக்கும் வெப்ப அளவில் அதிக வித்தியாசம் கிடையாது.
உலகப் பந்தின் ஒரே கோட்டில்தான் இரண்டு நகரமும் இருக்கிறது. ஆனால், பெங்களூரு கடலிலிருந்து தள்ளியும் உயரமானதாகவும் இருக்கிறது. கடல் காற்று பெங்களூரு சென்றடைய அதிக உயரத்தை அடைய வேண்டும். அதற்குள் காற்றில் உள்ள நீர்ப்பதம் காய்ந்துவிடுகிறது. அதனால் உஷ்ணம் அதிகமாக இருந்தாலும் அது மக்களால் உணர முடியாமல் போய்விடுகிறது. காற்றின் ஈரப்பதத்தைக் குறைக்க மரங்களே நமக்குப் பெருந்துணை புரிகின்றன.
ஆனால், முழுவதுமாக மாற்ற முடியாது. சென்னை மட்டும் அல்ல, கடல் அருகே இருக்கக்கூடிய அனைத்துப் பெரிய நகரங்களும் இதுபோன்றேதான் இருக்கின்றன. அமெரிக்காவின் டேச்சேஸ், ஃப்ளோரிடா, கலிஃபோர்னியா போன்ற மாநிலங்களில் உள்ள பெரிய நகரங்களும் வெயில் காலங்களில் இப்படித்தான் இருக்கின்றன. சிங்கப்பூர்கூட இதே நிலைதான்.
- அலெக்ஸ்,இணையதளம் வழியாக…
***
இசையுடன் உணவு
சென்னை 376 பகுதியில், ‘நல்ல சோறு எங்கே கிடைக்கும்?’ என்ற கட்டுரையில் சென்னையில் எங்கெங்கு, என்னென்ன ருசியாகக் கிடைக்கும் என்பதை மிக அழகாகத் தெரிவித்திருந்தார் விமலாதித்த மாமல்லன்.
அவர் பட்டியலிட்ட பலகாரங்களைவிட, அதனை உவமானங்களோடு அறிமுகப் படுத்திய விதம் அந்தப் பலகாரத்தின் சுவையைவிட அதிகமாக இருந்தது. ஒரு நல்ல இசையுடன் உணவருந்திய மகிழ்ச்சியைப் போல ஒரு நல்ல தமிழில் உவமானத்துடன் கூடிய சென்னையின் பிரபலமான பல்வகை உணவுகளை விருந்தாக உண்ட மகிழ்ச்சியைக் கட்டுரையாளர் அளித்துள்ளார்.
- வீ. சக்திவேல்,தே.கல்லுப்பட்டி.