

1907-ல் அரவிந்தர் நடத்திவந்த ‘வந்தே மாதரம்’ பத்திரிகையில் வெளிவந்த ஒரு கட்டுரைக்காக அவர் மீது வழக்குத் தொடுத்தது ஆங்கில அரசு.
அந்த வழக்கில் சாட்சி சொல்ல மறுத்த வங்காள விடுதலைப் போர் வீரரும், பத்திரிகையாளருமான விபின் சந்திரபாலருக்கு ஆறு மாதம் சிறைத் தண்டனை விதித்தது அரசு. தண்டனை முடிந்து விபின் விடுதலை நாளை நாடு முழுவதும் தேசபக்தர் கள் கொண்டாடினர்.
தூத்துக்குடியிலும் அந்த நாளைக் கொண்டாட வ.உ.சிதம்பரம் பிள்ளையும், சுப்பிரமணிய சிவாவும் முடிவுசெய்தனர். ஆனால், ஆங்கில அரசு தடை விதிக்கவே, திருநெல் வேலியிலேயே ஊர்வலத்தையும் கூட்டத்தையும் நடத்த ஏற்பாடு செய்தனர். இதற்கு ஆட்சியாளர் விஞ்சு துரையும், உதவி ஆட்சியாளர் ஆஷ் துரையும் அனுமதி தரவில்லை. தடையை மீறி தாமிரபரணி ஆற்றங்கரையில் பொத்துக்கூட்டம் நடத்தினர். ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டனர்.
தடையை மீறியதால் வ.உ.சி., சிவா, பத்மனாப ஐயங்கார் ஆகியோர் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டைச் சிறையில் அடைக்கப்பட்டனர். தங்களுடைய அன்புத் தலைவர்கள் கைது செய்யப்பட்டதைத் தூத்துக் குடியில் தலைமைக் காவலராக இருந்த குருநாத ஐயர் கடுமையாகக் கண்டித்தார்.
ஆகவே, அவரையும் ஆறு மாதங்கள் சிறையில் தள்ளியது ஆங்கில அரசு. இந்தச் சம்பவம் குறித்து “நான் பிள்ளைவாளையும், சிவாவையும் பார்த்து உரையாடிக் கொண்டிருந்தபோது, ஸ்ரீகுருநாத ஐயரும் வந்து சேர்ந்தார். இவர் என்னைக் கண்டவுடன் ‘வந்தே மாதரம்’ என்று முழங்கிய தொனி சிறைக்கூடம் முழுவதும் எதிரொலித் தது. சத்திரிய நடையும், சத்திரியப் பார்வையும் இவர் எப்படிப் பெற்றார் எனத் தெரியவில்லை” என மகாகவி பாரதி தனது ‘இந்தியா’ இதழில் 2.5.1908 அன்று ஒரு பத்தி எழுதினார்.
அதன்பிறகு ‘வந்தே மாதரம்’ குருநாத ஐயர் என அவர் அழைக்கப்பட்டார். விடுதலைப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்ததால், சிறையில் அடைக்கப் பட்ட குருநாத ஐயரை தண்டனைக் காலம் முடிந்த பிறகும் ஆங்கில அரசு கொடுமைப்படுத்தியது. ‘வந்தே மாதரம் செட்டியார்’ என்ற கட்டுரை இந்த சம்பவத்தைப் பகிரத் தூண்டியது.
- பி. விஸ்வநாதன்,சென்னை.