

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் இடஒதுக்கீட்டுக்காக முதல் திருத்தம் கொண்டுவரப்படுவதற்கு முக்கியக் காரணமாக இருந்தவர் பெரியார். சென்னையில் தம் வாழ்நாளில் இறுதியாக நடத்திய தமிழர் சமுதாய இழிவு ஒழிப்பு மாநாட்டில்கூட, “இந்திய அரசமைப்புச் சட்டத்தில் இடம்பெற்றிருக்கும் தீண்டாமை ஒழிக்கப்படுகிறது என்பதற்குப் பதிலாக சாதி ஒழிக்கப்படுகிறது” என்று திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும் என்ற தீர்மானத்தை பெரியார் நிறைவேற்றினார்.
மதுரை மாநாட்டில் குருமூர்த்தியின் பங்கேற்பு ‘யாராவது சிக்க மாட்டார்களா?’ என்கிற ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஏக்கத்தையே காட்டுகிறது. ஒடுக்கப்பட்ட சமூகத்தில் சில குறிப்பிட்ட பிரிவினரை ஒன்றிணைத்து, ‘தேவேந்திர குலத்தவர் என்று அறிவித்துவிட வேண்டும்;
இடஒதுக்கீடு எங்களுக்கு வேண்டாம்’ என்றெல்லாம் இன்றைக்குச் சில தனி நபர்களால் வேண்டுகோள் முன்வைக்கப்படுகிறது. இது பெரும்பான்மையினரின் கருத்து அல்ல என்றாலும், இப்படி வேண்டுகோள் வைப்பவர்கள் ஒரு விஷயத்தை யோசிக்க வேண்டும்.
இடஒதுக்கீடு தவிர்க்கப்பட்டு, தேவேந்திரர்குலம் என்று பெயர் சூட்டப்பட்டுவிட்டால் மட்டும், நாளை நம்மைச் சுற்றியுள்ள இழிவுகள் எல்லாம் ஒழிந்துவிடுமா? இடஒதுக்கீடு வேண்டாம்; தேவேந்திரகுலம் என்று சொல்லிவிட்டால் ஆண்டாண்டு காலமாக ஒடுக்கப்பட்ட மக்கள் கல்வியில் முன்னுக்கு வந்துவிடுவார்களா? வளர்ச்சி தலைதூக்கிவிடுமா?
இப்படியெல்லாம் பேசுபவர்கள் இடஒதுக்கீடு எதைச் சாதித்திருக்கிறது என்கிற வரலாற்றைத் தெரிந்துகொள்வது நல்லது. ஒரு சின்ன உதாரணம், தமிழ்நாட்டில் அருந்ததியர்களுக்கு திமுக ஆட்சியில் கடந்த 2009-ல் 3% இடஒதுக்கீடு அளிக்கப்பட்டது. அதன் பலன் என்ன தெரியுமா? இந்த இடஒதுக்கீடு கிடைப்பதற்கு முன், 2008-2009-ல் மருத்துவப் படிப்பில் அருந்ததியினர் பெற்ற இடங்கள் 13.
இடஒதுக்கீட்டுக்குப் பின் 2009-2010-ல் அருந்ததியினர் பெற்ற இடங்கள் 56. இடஒதுக்கீட்டுக்குப் பின் 93% அவர்கள் பிரதிநிதித்துவம் அதிகரித்துள்ளது.
இந்த வளர்ச்சி கூடாது என்பதுதான் மதுரை மாநாட்டின் நோக்கமா? ஒடுக்கப்பட்ட மக்களின் முதுகெலும்பை முறிக்க அவர்களையே கருவியாக்கும் சூழ்ச்சியல்லவா இதன் பின்னணியில் நெளிகிறது? மாநாட்டைக் கூட்டியவர்கள் மனுதர்மத்தைக் கையில் எடுத்திருக்கிறார்கள்.
“கோயிலுக்குள் போக முடியாதவர், பசுவைத் தெய்வமாக வணங்காதவர், மாட்டிறைச்சி உண்பவர் தன் இனத்தில் இறப்பவரின் உடலைத் தாமே அடக்கம் செய்பவர், ஒருவரைப் பார்த்தாலோ, தொட்டாலோ தீட்டு என்று கருதப்படுபவர் ஆகியோரே தீண்டத்தகாத சாதியினர் என்கிறார் மனு.
ஆனால், எங்கள் சமூகம் இவற்றில் எந்தக் கூறுகளிலும் இடம்பெறாத சமூகம்” என்று பெருமைப்பட்டுப் பேசியுள்ளார் மாநாட்டு ஏற்பாட்டாளரான தோழர். இதன் பொருள் என்ன? மாட்டுக் கறி உண்பவர் உட்பட - அவர் கூறும் நிலையில் உள்ளவர்கள் அத்தனை பேரும் தீண்டத்தகாதவர் என்று மனு கூறுவதை அவர் ஏற்றுக்கொள்கிறார் என்பதுதானே!
அண்ணல் அம்பேத்கர் இந்த சாதிய அடுக்குமுறைச் சூழ்ச்சியைத்தான் அம்பலப்படுத்தினார். இந்தச் சூழ்ச்சிக்கு இந்த 2015-லும் பலியாகும் ஆட்கள் இருப்பது எவ்வளவு பெரிய கொடுமை! பாஜகவின் அகில இந்தியத் தலைவர் இதனை வரவேற்கிறார் - பாராட்டுகிறார் என்பதை எளிதாகவே புரிந்துகொள்ளலாம்.
ஆர்.எஸ்.எஸ். - பாஜகவின் இந்துத்துவா கோட்பாடு என்பதே சாதியைக் கட்டிக் காப்பதுதானே? அது சரி, அவர்கள் வரலாறே அப்படித்தானே! வி.பி.சிங் பிரதமராக இருந்தபோது, மண்டல் குழு பரிந்துரையின்படி பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வேலைவாய்ப்பில் 27% இடஒதுக்கீட்டை அறிவித்தபோது, அதுவரை வெளியிலிருந்து அவ்வாட்சிக்கு ஆதரவு கொடுத்துவந்த ஆதரவை விலக்கிக்கொண்டு, அந்த ஆட்சியையே கவிழ்த்த கட்சிதானே அது!
ஏன், பாஜகவின் தேசியத் தலைவர்களுள் ஒருவரான சி.பி.தாக்கூர் 16-வது மக்களவைத் தேர்தலுக்கு முன்பாகவே, “இடஒதுக்கீடு தேவையில்லை; நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இதுகுறித்து முடிவெடுப்போம்!” என்று அறிவித்தாரே!
எல்லாவற்றுக்கும் நிச்சயம் பதில் உண்டு. தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் விரைவில் வரவிருக்கிற காலகட்டத்தில், சமூகநீதியின் வளமான தமிழ் மண் தக்க பாடத்தை இவர்களுக்கு அளிக்கும்!
- கி. வீரமணி, தலைவர், திராவிடர் கழகம்.