

‘தி இந்து’வில் பாலியல் படங்கள் - வலைதளங்கள் தொடர்பான என்னுடைய ‘சுதந்திரமும் பொறுப்பும்’ கட்டுரை 13.08.15 அன்று வெளியானது.
இதுவரை எவ்வளவோ பத்திரிகைகளில், எத்தனையோ கட்டுரைகள் எழுதியிருக்கிறேன் என்றாலும், ‘தி இந்து’வில் வெளியான இந்தக் கட்டுரைக்குக் கிடைத்த வரவேற்பு என்னைத் திகைக்கவைக்கிறது. நாள் முழுக்க செல்பேசியில் யார் யாரோ அழைத்துக்கொண்டிருந்தார்கள். எண்ணற்ற மின்னஞ்சல்கள். ஒருவர் எழுதியிருந்தார். “நான் நீண்ட காலமாக ஆபாசப்படங்கள் பார்க்கும் பழக்கம் உள்ளவன். ஆனால், இந்தக் கட்டுரையைப் படித்த நேரத்தில் குற்ற உணர்வில் மனம் உடைந்து அழுதேன்.”
பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நம்மிடம் வழிமுறைகள் இல்லாமல் இருக்கலாம். ஆனால், நாம் சமூகத்தோடு நடத்துகிற ஆழமான உரையாடல்களின் வழியே நம்முடைய பார்வைகள் வெளிச்சம் பெறுகின்றன.
மேலும், காட்சி ஊடகங்களில் மணிக்கணக்கில் விவாதித்தாலும் தொட முடியாத சில புள்ளிகளை அச்சு ஊடகங்களில் எளிதாகத் தொட முடிகிறது என்பதை ஒரு எழுத்தாளனாக நான் முழுமையாக உணர்ந்துகொண்ட இன்னொரு சந்தர்ப்பம் இது. ‘தி இந்து’வின் பெரும்பாலான கட்டுரைகள், அந்த உரையாடலை வெகுஜனதளத்தில் இடைவிடாமல் தொடர்ந்து நிகழ்த்துகின்றன.
வாசகர்கள் அந்த உரை யாடலில் முழுமையாகப் பங்கெடுக்கிறார்கள். தமிழ் இதழியலில் இது ஒரு அரிதான களம். மிக்க நன்றி!
- மனுஷ்ய புத்திரன், சென்னை.