

டிசம்பர் 3, 1984 அன்று போபால் விஷ வாயு விபத்தின் காரணமாக லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு மரணமடைந்தனர். இந்நிகழ்வு நடந்து 35 ஆண்டுகள் கடந்துவிட்டன. இன்றும் மக்களும் பிற உயிரினங்களும் வாழத் தகுதியற்ற இடமாக அந்த இடம் இருக்கிறது. மறைந்த நீதியரசர் வி.ஆர்.கிருஷ்ணய்யர் ஒரு சொற்பொழிவில், ‘சுற்றுச்சூழல் நீதியும் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உள்ளடக்கப்பட வேண்டும்’ என்று தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னும் நியாயம் கிடைக்கவில்லை. கருவில் இருந்த சிசுக்களும் பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு வயது 35.
- அக்ரி நா.நாகராசன், மின்னஞ்சல் வழியாக..
அரசுப் பள்ளிகளில் கழிப்பறைகளின் தரத்தை மேம்படுத்த வேண்டும்
சில நாட்களுக்கு முன்பு கல்வி அமைச்சர் செங்கோட்டையன், ‘மாணவர்கள் பள்ளியில் போதுமான அளவு குடிநீர் அருந்துவதில்லை. அதனால், தண்ணீர் அருந்துவதற்காக இடைவேளைகள் விடப்படும்’ என்று கூறியிருந்தார். அரசுப் பள்ளியில் மாணவிகள் ஏன் தண்ணீர் அருந்துவதில்லை என்பதற்கு நுட்பமான வேறு காரணம் இருக்கிறது. அது அரசுப் பள்ளிகளின் கழிப்பறைகளின் தரம் சார்ந்தது.
நாங்கள் படித்த காலத்திலிருந்து இன்று வரை அது மேம்படுத்தப்படவே இல்லை. சுத்தம், சுகாதாரமற்று இருப்பதால் அங்கு செல்ல அருவருப்படைந்தே தண்ணீர் குடிப்பதைத் தவிர்ப்போம். பள்ளிக்கு அருகில் வீடு உள்ள மாணவிகள் மட்டும் இடைவேளையில் வீட்டுக்குச் செல்ல முடியும். மற்றவர்களுக்கு அது சாத்தியப்படாது. மாணவர்கள் மேல் அக்கறை செலுத்துவதாக இருந்தால், பள்ளிகளின் கழிப்பறை வசதியை மேம்படுத்துவதிலும், அவற்றை முறையாகப் பராமரிப்பதிலும் அரசு உரிய கவனம் செலுத்த வேண்டும்.
- எஸ்தர் ஜான்சிராணி, தூத்துக்குடி, ‘உங்கள் குரல்’ வழியாக...
ஒரு நபரைச் சீர்திருத்துவதற்கும் மேலான தண்டனை என்பது அவர் செய்த குற்றத்தை, குற்றவுணர்வு ஏற்படுத்தும் வலியை உணரச் செய்வதேயாகும். குற்றம் செய்தவரை அடித்துக் கொல்வதோ, வேறு விதமான உடல் வாதைகளுக்கு உள்ளாக்குவதோ தண்டனையாகாது. தாங்கள் செய்த குற்றத்தின் வீரியத்தை உணர்வதும், அந்த உணர்வோடு வாழ்வதும்தான் அவர்களுக்கான தண்டனையாக இருக்க முடியும்.
- ராகமாலிகா கார்த்திகேயன், பத்திரிகையாளர்
ரூ.190.68கோடி - பெண்களின் பாதுகாப்பு தொடர்பான முன்னெடுப்புகளுக்காக மத்திய அரசு ஒதுக்கும் நிர்பயா நிதியில், தமிழ்நாடு இதுவரை பெற்றிருக்கும் தொகை. இதில் வெறும் ரூ.6 கோடி மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது.