Published : 07 Oct 2019 07:18 AM
Last Updated : 07 Oct 2019 07:18 AM

இப்படிக்கு இவர்கள்: அக்கறையான விமர்சனம் - நிச்சயம் விவாதிக்கிறோம்

நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவிடமிருந்து கம்யூனிஸ்ட்டுகள் பணம் பெற்றது குறித்த ‘கொள்கையே... உன் விலை என்ன?’ கட்டுரை படித்தேன். இந்தப் பிரச்சினை குறித்து கம்யூனிஸ்ட் கட்சியின் மீது அக்கறையுள்ள பலரும் மிகுந்த கவலையுடன் கருத்துகளைத் தெரிவித்துவருகின்றனர். எவரிடமிருந்தும் பெருந்தொகைகளை நன்கொடையாகப் பெறக் கூடாது என்பதே கட்சியின் நிலைப்பாடு.

அதில் எந்த மாற்றமும் இல்லை. கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், உழைப்பாளி மக்களே எங்கள் கட்சியின் ஆதாரம் என்பதிலும் மாற்றம் இல்லை. இந்தத் தேர்தலையும் எங்களின் இந்த ஆதார சக்திகள் மூலமே சந்தித்தோம் என்பதை உறுதிபடக் கூற முடியும். இந்த முறை வங்கிக் கணக்கு மூலம் திமுக அளித்த நன்கொடையைப் பெற்று அந்தந்தத் தொகுதியில் தோழமைக் கட்சிக்குக் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதற்கான வரவு-செலவு விவரம் முழுமையாகத் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்துள்ளோம்.

இதில் ஒளிவுமறைவு எதுவுமில்லை. தேர்தல் ஆணையம் கணக்கு விவரங்களை வெளியிடும்போது அனைவரும் தெரிந்துகொள்ள முடியும். 27,000 கோடி ரூபாய் தேர்தல் செலவு செய்துள்ள பா.ஜ.க.வைப் பற்றி யாரும் கேள்வி எழுப்பவில்லை. ஏனென்றால் அந்தக் கட்சி அப்படித்தான் என்பதை உணர்ந்தே அதை கேள்விக்குள்ளாக்காமல் இருக்கிறார்கள் என்று நான் கருதுகிறேன். கம்யூனிஸ்ட்டுகளின் மீதுள்ள அக்கறையில் வந்துள்ள இத்தகைய விமர்சனங்களைக் கட்சி நிச்சயமாக உள்வாங்கிக்கொள்ளும். இதுகுறித்து அகில இந்தியத் தலைமையும் விவாதித்து
உரிய வழிகாட்டுதல்களை அளிக்கும்.

- பெ.சண்முகம், மாநில செயற்குழு உறுப்பினர்,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்).

பயிற்சி மையங்கள் அனுமதியின்றி இயங்கக் கூடாது

ஒரு தொடக்கப் பள்ளி தொடங்குவது என்றால்கூட பல நிபந்தனைகளை நிறைவுசெய்து, தக்க அனுமதி பெற வேண்டும். அனுமதியின்றி இயங்குவது சட்டப்படி குற்றம். ஆனால், பயிற்சி மையம் நடத்த எந்த அனுமதியும் தேவையில்லை. உள்கட்டமைப்பு வசதிகள் எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. பயிற்சி அளிப்போரது கல்வித் தகுதி நிர்ணயிக்கப்படவில்லை. கழிப்பறைகள்கூட இல்லாது செயல்படும் பயிற்சி நிறுவனங்கள் பல உண்டு. பல கோடி செலவில் செய்யப்படும் விளம்பரங்களால் கவரப்பட்டு மாணவர்கள் சேர்கின்றனர். பலரும் ஏமாறுகின்றனர். பயிற்சி மையங்களுக்கு விதிமுறைகள் கொண்டுவருவது மிகமிக அவசியம்.

- ச.சீ.இராஜகோபாலன்,
மூத்த கல்வியாளர், சென்னை.

செல்போன் படுத்தும் பாடு

உலகமே என் கையில் என்று ஒருகாலத்தில் செல்போனைக் கொண்டாடிய நாம், இன்று உலகமே செல்போனின் கையில் சிக்கியுள்ள விபரீதத்தைப் புரிந்துகொள்ளத் தொடங்கியுள்ளோம். அமெரிக்கப் புகைப்படக்காரர் எரிக் பிக்கர்ஸ்கில்லின் இன்றைய மனிதகுலத்தின் நிலைமை பற்றி 360 டிகிரி பகுதியில் தெளிவுபடுத்திய ‘செல்போன் ஆக்கிரமித்த உலகு’ படித்தேன். அவரது புகைப்படங்கள் விரக்திச் சிரிப்பைத் தந்தன. செல்போன் ஆட்கொண்ட உலகாக மாறிவிட்டிருப்பது மிகப் பெரும் சமூக அவலம்தான்.

- கே.ராமநாதன், மதுரை.

வாசிக்கும் சமூகமே செழிப்பானது

‘இந்து தமிழ்’ நாளிதழில் வெளிவரும் ‘நூல்வெளி’ பகுதி புத்தகப் பிரியர்களுக்குத் தொடர்ந்து விருந்தளித்துவருகிறது. தமிழ் மக்களுக்கு வாசிப்புக் குறைபாடு ஒருபோதும் வந்துவிடக் கூடாது எனும் நோக்கத்தோடு செயல்பட்டுவருவதற்கு நன்றி. வழக்கமான புத்தக அறிமுகமாக இல்லாமல், நுட்பமான வாசிப்பை விரிவாகத் தரும் பாங்கு அருமை. இணையவெளிகளில் உலவும் நவீன மனிதர்களிடம் வாசிப்புப் பழக்கத்தைக் கொண்டுசேர்க்க வேண்டும். வாசிக்கும் சமூகமே செழிப்பானதாக இருக்க முடியும். வாசிப்பதை வழக்கமாகக் கொண்டால் செல்போனில் பறிபோகும் நேரங்கள், மன உளைச்சலைத் தவிர்க்கலாம்.

- பா.சக்திவேல், கோயம்புத்தூர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x