இப்படிக்கு இவர்கள்: ஏழைகளின் மீது இரக்கம் இல்லையா?

இப்படிக்கு இவர்கள்: ஏழைகளின் மீது இரக்கம் இல்லையா?

Published on

ஆகஸ்ட் 14 அன்று வெளியான ‘மத்திய நிதியை செலவழிப்பதில் தமிழக அரசுக்கு அலட்சியம் ஏன்?’ கட்டுரை படித்தேன். ஒரு மாநிலத்தின் வளர்ச்சித் திட்டங்களும், சமூக நலத் திட்டங்களும் இரு கண்களாக இருக்க வேண்டும். தமிழ்நாடு போன்ற ஏழை, நடுத்தர மக்கள் அதிகளவில் வாழும் மாநிலங்களில் சமூக நலத் திட்டங்கள் உரிய பயனாளிகளுக்குச் சென்றுசேர்ந்தால்தான் அவர்கள் மீண்டெழ முடியும்.

பிரதம அமைச்சரின் ‘ஆவாஸ் யோஜனா’ திட்டம் மூலம் பிற்படுத்தப்பட்ட ஏழை எளியவர்கள் எங்கள் பகுதியிலேயே பல ஆண்டுகளாக விண்ணப்பித்து பலர் காத்திருக்கிறார்கள். ஆனால், இதுபோன்ற சமூக நலத் திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கியும் அதைச் செலவழிக்காமல் சேமிப்புக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது என்பது அதிர்ச்சியாக இருக்கிறது. குறிப்பிட்ட காலத்துக்குள் திட்டங்களை மக்களுக்குக் கொண்டுசேர்க்காமல் அலட்சியம் காட்டுவது என்ன நியாயம்?

- இரா.முத்துக்குமரன், அற்புதபுரம்.

அந்தரங்கத்தைக் காவுவாங்கும் இணையம்

ஆகஸ்ட் 13 அன்று வெளிவந்த ‘கூகுள், பேஸ்புக், ட்விட்டர்... விடாமல் துரத்தும் பயங்கரம்!’ கட்டுரை வாசித்தேன். இணையதளத்தில் அடகுவைக்கப்படும் தனிநபர் தரவுகள், தானியங்கி வழிகாட்டல்கள், விளம்பரத் தூதுகளெல்லாம் நம் சுதந்திரத்தையும் அந்தரங்கத்தையும் காவுவாங்குவதை அப்பட்டமாகக் காட்டுகிறது இக்கட்டுரை. மனிதன் காடு கரைகளில் அலைந்து திரிந்த காலம் போய் இணையவெளியில் அலைமோதும் சமூக விலங்காகப் பரிணாம வளர்ச்சி அடைந்திருக்கிறான்.

பரஸ்பரப் பயன்பாடு பெறுவதற்காக சேவை தருவோர், சேவை பெறுவோரின் தகவல்களைத் தனியார் நிறுவனங்களுக்குத் தாரைவார்த்து வயிறு வளர்க்கின்றன. சுவருக்கும் கண் உண்டு என்பது தாண்டி, காற்றுக்கும் கண் உண்டு என்ற விழிப்புணர்வோடு, கூகுள் தேடுபொறி, பேஸ்புக், ட்விட்டர் போன்ற பக்கங்களில் மறைந்துள்ள ஆபத்துகளை அறிந்து கையாள உதவும் ஓர் அருமையான பதிவு.

- பா.சக்திவேல், கோயம்புத்தூர்.

சிந்தனையை மந்தமாக்கும் இணையம்

ஏதாவது ஒரு சந்தேகம் வந்துவிட்டால் வீட்டில் அப்பா அம்மா, ஆச்சி தாத்தாவிடம் கேட்டுத் தெரிந்துகொள்வோம். இல்லையெனில், புத்தகங்களைச் சுட்டி தேடிக்கொள்ளச் செய்வார்கள். நூலகம், நண்பர்கள் வீடு என்று தேடும் படலம் தொடரும். தற்போதோ சின்ன எழுத்துப் பிழைக்குக்கூட ‘கூகுள் பண்ணிப்பாரு’ என்கிற நிலைமைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம். ஒருபுறம் இந்த இணையத் தேடல் வசதியானதாக இருக்கிறது என்றாலும், பல வகைகளில் அது நம்மை மந்தமாக்கியிருக்கிறது.

ஒவ்வொரு செயலியும் நாம் உள்ளே செல்லக்கூடிய அனுமதியைத் பொறுப்புத்துறப்பு என்று பொத்தாம் பொதுவாக வைத்திருக்கின்றன. என்ன இருக்கிறது என்று தெரியாமலே நாம் அதை ஏற்றுக்கொண்டுவிடுகிறோம். இவை தம் ஒப்பந்தக்காரரிடம் நம் தகவல்களைக் கொண்டுசேர்த்து, நம் விருப்பு வெறுப்புகளுக்கேற்ப விளம்பரங்கள் இடுகின்றன. இப்படி ஒன்றுக்குள் ஒன்று என்று உள்சென்றுகொண்டே நம் அத்தனைத் தகவல்களையும் தெரிந்துவைத்துக்கொள்கின்றன. சோம்பேறித்தனத்தைச் சற்று தூர எறிந்துவிட்டு, கூடுதல் கவனத்தோடு இணைய சேவையை அணுகுவோம்.

- ப.தாணப்பன், தச்சநல்லூர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in