

ஆகஸ்ட்-12 அன்று வெளியான செல்வ புவியரசனின் ‘சரிவின் பாதையில் இந்தியப் பொருளாதாரம்’ கட்டுரை படித்தேன். சேவைத் துறை சில தேவைக்காக மட்டுமே இயங்கும் துறையாக மாறிவருவதும், பணியாளர் நியமனம் கால வரம்பின்றி அனைத்துத் துறைகளிலும் தள்ளிப்போவதையும் கட்டுரை தெளிவுபடுத்துகிறது. விலைவாசி உயர்வும், அதற்குத் தகுந்த அரசு ஊழியர்களுக்கான ஊதிய உயர்வும் நாட்டின் மக்கள்தொகையில் 3 சதவிகிதத்தைக்கூடத் திருப்திப்படுத்தாது.
மக்களின் வாங்கும் திறன் சாமானியர்களைக் கொண்டு கணக்கிடப்படுகிறதா அல்லது விற்கும் எண்ணிக்கையைக் கொண்டு அளவிடப்படுகிறதா? பெருநிறுவனங்களை மட்டும் மையப்படுத்திக் கொண்டுவரும் திட்டங்களை ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் பயனுள்ளதாய் திட்டமிடல் வேண்டும். அரசு இயந்திரம் பல துறைகளிலும் தொய்வின்றி இயங்க பொருளாதாரத் தளத்தில் உள்ள தாமதங்களைச் சரிகட்ட வேண்டும் என்பதை இக்கட்டுரை அழகாகக் எடுத்துக்காட்டியுள்ளது.
- பா.சக்திவேல், கோயம்புத்தூர்.
அருகிவரும் கிராமப்புற வேலைவாய்ப்புகள்
செல்வ புவியரசனின் கட்டுரை காலத்துக்கேற்றது. அமைப்புசாரா தொழில்களில் ஏராளமான வேலைவாய்ப்புகள் இருந்தன. இன்றைக்கு கிராமப்புற வேலைவாய்ப்புகள் அருகிவிட்டன. இளைஞர்களின் கல்வித் தரம் உயர்ந்த அளவுக்கு, அவர்களுக்கான வேலைவாய்ப்புகள் உயரவில்லை. தனிநபர் வருமானத்தை உயர்த்தினால்தான் அத்தியாவசியப் பொருட்களின் நுகர்வும் அதிகமாகும்.
வளரும் அறிவியல் தொழில்நுட்பத்துக்கேற்ற வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும். படித்த இளைஞர்களுக்குத் திறமைக்கேற்ற தொழிலை உருவாக்கி, தொழில் முனைவோராக்க வேண்டும். தொடர் கண்காணிப்பு, ஆலோசனைகள், பயிற்சிகள் ஆகியவை மேலும் அவர்களை வளர்த்தெடுக்கும்.
- க.அம்சப்ரியா, பொள்ளாச்சி.
கமல்ஹாசன்: இந்திய சினிமாவில் ஒரு தனித்துவமான நட்சத்திரம்
திரையுலகில் 60-வது ஆண்டில் கமல்ஹாசன் அடியெடுத்து வைத்திருப்பது பாராட்டத்தக்கது. அவரது திரைப் பயணம் மிக நீண்டது. இந்திய சினிமாவில் கமல் ஒரு தனித்துவமான நட்சத்திரம் என்றால் அது மிகையல்ல. நடிப்பு மட்டும் இல்லாமல் திரைக்குப் பின்னால் அனைத்து தொழில்நுட்ப விஷயங்களிலும் ஆழ்ந்த ஞானம் கொண்டவர். தான் ஏற்று நடிக்கும் வேடத்துக்கேற்ப அலங்காரம் மட்டுமல்லாமல் உடல்மொழி, பேச்சு பாணி என ஒவ்வொரு விஷயத்திலும் மெனக்கெடக்கூடியவர். அவரது திரையுலகப் பயணம் 100 ஆண்டுகளைத் தொடட்டும்.
- பொன்விழி, அன்னூர்.
பேரிடர் மீட்பை தேசியப் பிரச்சினையாக்குங்கள்
வெள்ளத்தால் மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரள மாநிலங்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் புயல், வெள்ளம் போன்ற இயற்கைப் பேரிடர்களால் பல்வேறு மாநிலங்கள் கடும் சேதாரத்துக்குள்ளாகின்றன. பேரிடர்களுக்குப் பிறகான விவாதங்களில் பெரும்பாலும் அவை மாநிலப் பிரச்சினைகளாகவே அணுகப்பட்டுவருகின்றன. இனி தீவிரமாக அதை இந்தியாவின் பிரச்சினையாக முன்னெடுக்க வேண்டும்.
- முத்தமிழ்ச்செல்வன், மதுரை.