

தமிழுக்குக் கிடைத்த கொடை
கவிஞர் வைரமுத்துவின் ‘தமிழாற்றுப்படை’ தொகுப்பு தமிழுக்குக் கிடைத்த கொடை; அவரது படைப்புகளில் உச்சம். இதுகுறித்து ஜூலை 27 அன்று வெளியான ‘நான்காண்டு கால தமிழியக்கம்’ கட்டுரை படித்தேன். 24 ஆளுமைகளைத் தேர்ந்தெடுத்ததற்கான காரணத்தை வைரமுத்து ஒரு நேர்காணலில் தெரிவித்துள்ளார். அப்படியிருக்க, வைரமுத்து தொகுப்பு என்பதால் கருணாநிதியும் உள்ளார் என்று எழுதியிருப்பது மட்டும் நெருடலாக இருந்தது.
- பொன்.குமார், சேலம்.
சிலே மக்களும் அவர்கள் வரலாறும் அதிசயங்களே!
ஜூலை 28 அன்று வெளியான சாரு நிவேதிதாவின் ‘சிலே: போராட்டங்களின் தேசம்’ கட்டுரை வாசித்தேன். பூமிக்கு அடியில் அடைப்பட்டுக் கிடந்த சிலே மக்களின் மன வலிமை கண்டு வியப்புற்றேன். அயெந்தேவின் இறுதி உரையாடல் மனதை உருக்கியது. அவருடைய வார்த்தைகளுக்கு மதிப்பளித்து, பொறுமை காத்த சிலே மக்களுக்கு ஒரு பெரிய சலாம்! பாலைவனம், கடல் என்று சிலேவின் நிலவியல் மட்டுமல்ல; அந்நாட்டு மக்களும், அவர்கள் உருவாக்கும் வரலாறும்கூட மாபெரும் அதிசயங்கள்தான்.
- கயல் சுபி, 10-ம் வகுப்பு, மகரிஷி வித்யா மந்திர், ஓசூர்.