

ஜூலை 15 அன்று ‘காமராஜரின் 1954-1963: வழிகாட்டும் ஒரு தசாப்தம்!’ கட்டுரையும், பெட்டிச் செய்திகளும் அவரது பொற்கால ஆட்சியை இன்றைய தலைமுறையினருக்கு உணர்த்தும் விதமாக அமைந்துள்ளன. கல்விக்கண் திறந்தவர், மதிய உணவுத் திட்டத்தின் பிதாமகன், எளிமையின் எடுத்துக்காட்டு, இணைப்புப் பெட்டி தொழிற்சாலை, நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம், திருச்சி பெல் நிறுவனம் போன்றவற்றைத் தமிழ்நாட்டுக்குக் கொண்டுவந்தவர், நீர் மின் உற்பத்தியை முழுமையாக உற்பத்தி செய்தவர் - இவையெல்லாம் காமராஜரின் பெயர் கேட்டதும் நம் நினைவுக்கு வரும். அவற்றையெல்லாம் காமராஜர் சிறப்புப் பக்கத்தில் துல்லியமாக எழுதியிருப்பதைக் கண்டு மகிழ்ந்தேன். காமராஜர் தேர்தலில் தோல்வியுற்றதை நினைத்து அண்ணா மிகவும் மனம் வருந்தினார் என்ற செய்தியே காமராஜரின் அழியாப் புகழுக்கு மகத்தான சான்று.
- ஜி.ராமலிங்கம், கொரட்டூர்.
அதிகாரத்தைச் சரியாகப் பயன்படுத்திய காமராஜரின் மாண்பு
காமராஜரின் செயல்பாடுகளில் கல்வி, மதிய உணவு, தொழிற்சாலைகள், அணைக்கட்டுகள் இப்படி மக்களின் அடிப்படை வாழ்வாதாரத்துக்குத் தேவையான எல்லாமே மக்களின் உணர்வோடு பிணைக்கப்பட்டவை. அதைச் செயல்படுத்திய காமராஜரின் திறமை மெச்சத்தக்கது. ஒரு அரசு தன் அதிகாரத்தை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதை நிரூபித்துக் காட்டிய தலைவர் அவர். கல்விக்காக அவர் ஆற்றிய அரும்பணிக்காக மட்டுமேகூட நாம் என்றென்றும் அவரை நினைவில் வைத்திருக்க வேண்டும்.
- எஸ்.கணேஷ் குமார், சென்னை.
பொன்முட்டையிடும் வாத்துகளாகத் திருமண மண்டபங்கள்
ஜூலை 15 அன்று வெளியான வ.ரங்காசாரியின் ‘ஆடம்பரத் திருமணங்கள் எங்கே நிச்சயிக்கப்படுகின்றன?’ கட்டுரை ஒரு புதிய பார்வையைத் தமிழ்ச் சமூகத்துக்குக் கொடுத்திருக்கிறது. லட்சக்கணக்கில் செலவானாலும்கூட திருமணச் சடங்குகளின் அடிப்படைகளை யாரும் விட்டுவிடுவதாக இல்லை. ரூ.3,70,000 கோடி ஓராண்டு திருமணச் சந்தையின் மதிப்பு என்கிற தகவல் தலையைச் சுற்ற வைத்தாலும், சினிமா தியேட்டர்கள் பலவும், அரிசி மில்கள் பலவும் திருமண மண்டபங்களாக மாற்றப்பட்டு அவை பொன்முட்டையிடும் வாத்துகளாக மாறிப்போயிருக்கின்றன. பணம் கொழித்தவர்கள் ஆடம்பரத் திருமணங்களை நடத்துவதைப் போல ஏழைகளும் நடுத்தர வர்க்கத்தினரும்கூட அந்த எல்லைக்குள் நுழைவதைப் பெருமையோடு பார்க்கும் மனோபாவம் இன்று நிலவுகிறது. எளிமையான திருமணங்களெல்லாம் கௌரவப் பிரச்சினைகளாகப் பார்க்கப்படுகின்றன. அந்தப் போக்கு மாற வேண்டும்.
- இரா.முத்துக்குமரன், அற்புதபுரம்.
பேச்சுரிமைக்கு எதிரான சட்டம் வேண்டாம்
ஜூலை 15 அன்று வெளியான ‘தேசத் துரோகச் சட்டப்பிரிவை நீக்குங்கள்!’ தலையங்கம் படித்தேன். ஆங்கிலேயர்கள் என்னென்ன அடக்குமுறைச் சட்டங்களைப் பயன்படுத்தினார்களோ, அதே அணுகுமுறையைச் சுதந்திர இந்திய அரசும் பின்பற்றுவது வேதனைதான். வைகோ மீது பாய்ந்த 124ஏ எனும் பேச்சுரிமைக்கு எதிரான ஆயுதத்தின் முனை மழுங்கடிக்கப்பட வேண்டும்.
- மு.சுப்பையா, தூத்துக்குடி.