

பட்டியல் இனத்தவர்களுக்கான துணைத் திட்ட நிதி உரியவர்களைச் சென்றடைய கட்டாயம் தனிச் சட்டம் தேவை.
ஆந்திரம், கர்நாடக மாநில மாதிரியைத் தமிழகம் பின்பற்ற வேண்டும். ஒரு மத்திய சட்டத்தைக் கொண்டுவருவதும் அவசியம். இதை சட்டப்பேரவையில் நான் தொடர்ந்து வலியுறுத்திவந்துள்ளேன்.
இந்த ஆண்டு, மத்திய அரசு பட்டியல் இனத்தவர்களுக்கான துணைத் திட்ட ஒதுக்கீட்டைப் பெருமளவு குறைத்துள்ளது. துணைத் திட்ட நிதி பல்வேறு துறைகளுக்குப் பிரித்தளிப்பதன் பெயரால் சிதறடிக்கப்படுவதும் நிறுத்தப்பட வேண்டும். எல்லோருக்கும் அரசு செய்யும் உதவியைக் காட்டிலும் நலிந்துள்ள பட்டியலினத்தாருக்குக் கூடுதலாக உதவ வேண்டும். அதுதான் சமநீதியாக இருக்க முடியும்.
ஆனால், அனைவரும் பெறும் மிக்சி-கிரைண்டர்கள், முதியோர் உதவித்தொகை போன்றவற்றைப் பட்டியலினத்தார் பெறும்போது, அதற்கான செலவைத் துணைத் திட்ட நிதியில் இருந்து எடுத்துக்கொள்ளும் அநியாயமும் நடைபெறுகிறது. பட்டியலினத்தாரின் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றத்துக்கு, வன்கொடுமை தடுப்புச் சட்டம், இடஒதுக்கீடு, தனி துணைத் திட்ட ஒதுக்கீடு ஆகிய மூன்றும் பாதுகாக்கப்படுவதும் வலுப்படுத்தப்படுவதும் அவசியம்.
- பி.எல். சுந்தரம், எம்.எல்.ஏ., பவானிசாகர் சட்டமன்றத் தொகுதி