

ஜூலை 1 முதல் இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும். இல்லையெனில், அவர்கள் வாகனங்கள் முடக்கப்படும். மேலும், அவர்களது உரிமம் ரத்து செய்யப்படும் என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவு மிகவும் சரியானது. இந்த நிலையில், சென்னை பிரபல நரம்பியல் மருத்துவ நிபுணர் டாக்டர் பி. ராம மூர்த்தி அறிவுறுத்திய கருத்தை முக்கியமாகக் கவனத்தில் கொண்டு ஹெல்மெட் அணிவதைக் கட்டாயமாக ஏற்றுக்கொள்ள வேண்டும். ‘தலைமுடி கொட்டுதல், தலை வலி ஏற்படுதல், தலையில் ஹெல்மெட் சுமப்பது வேதனை தருகிறது போன்ற காரணங்களுக்காக ஹெல்மெட் அணிவதைத் தவிர்த்து, விபத்தில் சிக்கி மூளை சிதைந்து தொடர்ந்து உணர்வற்ற நிலையில் கிடப்பது வாழ்வில் மிகமோசமான நிலை’ என்ற அவரின் கருத்தை ஏற்று ஹெல்மெட் அணிவோம்.
- ஆர். பிச்சுமணி, திப்பிராஜபுரம்.
***
நீதிமன்றத்தின் உத்தரவு அனைவரும் கடைப்பிடிக்கப்பட வேண்டிய ஒன்று. கடந்த எட்டு வருடங்களாக ‘டிவிஎஸ் எக்ஸெல் எஸ்பி’ வண்டியைப் பயன்படுத்துகிறேன். ஒரு நாளும் தலைக்கவசத்தைப் பயன்படுத்தத் தவறியதில்லை. நண்பர்கள் என்னைப் பார்த்து, ‘‘இந்த வண்டிக்கெல்லாம் ஹெல்மெட் தேவையா?’’ என்று ஏளனமாகச் சிரிப்பார்கள். நான் அதைப் பற்றிக் கவலைப்பட மாட்டேன். என்னை நம்பி என் குடும்பம் இருக்கிறது. குடும்பத்தின் மேலுள்ள அக்கறையால் கவசம் அணிவதை நான் தவிர்த்ததே இல்லை. கண்டிப்பாக வரவேற்கக் கூடிய உத்தரவுதான் இது.
ஜெயமூர்த்தி,‘தி இந்து’ இணையதளம் வழியாக…