

மதிப்பீடுகளைப் பற்றி மோடி இப்போதைக்கு அதிகம் கவலைப்பட மாட்டார். இதே மதிப்பீடுகள் இரண்டு வருடத்துக்குப் பின் மாறும் என்ற நம்பிக்கை அவருக்கு அதிகம் இருக்கும். அப்போதும் ஒரு ஸ்டார் வாங்கும் நிலையில் இருந்தால், யோசிப்பார்.
- ஜே.கே. ஸ்ரீனிவாசன்,இணையம் வழியாக…
***
மக்களின் மதிப்பீடுகள் சரியானவையே. ஆனால், எதிர்க் கட்சிகள் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளவில்லை என்று கூற முடியாது. நிலம் கையகப்படுத்தும் மசோதா மீது மக்களின் எதிர்ப்பை ஒருமுகப்படுத்தி பிஜேபியை மறுபரிசீலனை செய்யுமளவுக்கு சூழ்நிலையை உருவாக்கியவர்கள் எதிர்க் கட்சிகள்தான்.
- வி. சுந்தர்ராஜ், இணையம் வழியாக…
***
மோடி 365 நாட்கள்: மக்கள் மதிப்பீடு பக்கத்தை வழக்கம்போலவே ஆர்வத்தோடு வாசித்தேன். வயது, பாலினம், தொழில், சமூகப் பின்புலம் என்று நோக்கும்போது பரந்த வெளியின் பிரதிபலிப்பு வெளிப்பட்டிருக்கிறது. நம்பிக்கை அளித்த மனிதரின் ஆட்சியில் ஓராண்டுக்குள் ஏற்பட்ட அலுப்பும் சலிப்பும் ஒருபக்கம். மெலிதான கோடாக இன்னும் எதிர்பார்ப்பு ஒரு பக்கம். நவீன தாராளமயப் பொருளாதார நாணயத்தின்(?) ஒரு பக்கத்தில் காங்கிரஸ், மறு பக்கம் பாஜக! ஐமுகூ அரசின் ஊழலையோ, இப்போதைய மத்திய ஆட்சியாளரின் நிலம் கையகப்படுத்தல், தனியார் மயத்தை வேகப்படுத்துதல், மதச் சார்பின்மைக்கு அச்சுறுத்தல், நாடாளுமன்ற ஜனநாயகத்தை மதியாது அவசர சட்டங்களாகப் பிறப்பித்தல், கோட்சேயைக் கொண்டாடுதல் உள்ளிட்ட அம்சங்களையோ இடதுசாரிகள் தானே காத்திரமாக எதிர்த்துப் போராடிக்கொண்டிருப்பது!
கல்வி, மருத்துவம் இரண்டுமே வர்த்தகமயமாகிப்போனதில் மக்கள் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மாற்றுக் கொள்கைகள்குறித்த ஊடக கவனம், ஊடக முன்னுரிமை, ஊடகத் தொடர் தேடல் அதிகரிக்கும்போது இடதுசாரிகள்குறித்த செய்திகள் மக்கள் மன்றத்தில் தாக்கத்தை வெளிப்படுத்தும்.
- எஸ்.வி. வேணுகோபாலன்,சென்னை.