

இந்திய இதயங்களைக் குறிவைத்து நடத்தப்படும் போர்குறித்த தலையங்கம் உண்மையான ஆதங்கத்தை அச்சேற்றியிருக்கிறது. இப்போதெல்லாம் இதய அறுவைச் சிகிச்சைக்கான செலவுகள், நோயாளிகளின் இதயத்தை மேலும் மேலும் நொறுங்கச் செய்துவிடுகிறது. பண வேட்கைக்கு முன்னால் அத்தனை உண்மைகளும் நோயாளிகளிடம் மறைக்கப் படுகின்றன. அரசு முறைகேடான மருத்துவத்தை ஒழுங்குபடுத்த வேண்டும். மருத்துவரானால் நிறைய சம்பாதிக்கலாம் என்ற எண்ணத்தை ஊட்டிப் படிக்கவைப்பதே சமூகக் குற்றம். நோயாளிகளுக்கு அறவழியில் பணியாற்றுவதற்காகவும், இயலாதவர்களுக்கும் இல்லாதவர்களுக்கும் உதவிடும் ஒப்பற்ற பணியாகவும் மருத்துவம் படிப்பவர்கள் மனதில் கொள்ள வேண்டும். அதேசமயம், நேர்மை தவறாத மருத்துவர்களையும் மருத்துவ மனைகளையும் மக்கள் தங்கள் இதயத்தில் நிறுத்தி நினைவுகூரத் தவறுவதில்லை என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
- கூத்தப்பாடி கோவிந்தசாமி, தருமபுரி
***
உயிர் காக்கும் மருந்துகளின் விலையைக் குறைத்து அவற்றை முறைப்படுத்துதல் மத்திய அரசின் கையில் இருக்கும்போது அதைக்கூடச் செய்ய மறுப்பது வருந்தத் தக்கது. மருத்துவம் என்பது சேவை மனப்பான்மையுடன் செய்ய வேண்டியது. மத்திய அரசு பொதுமக்களின் நலனுக்காக மருத்துவப் பொருட்களின் விலையைக் கட்டுக்குள் வைப்பது அத்தியாவசிய மான நடவடிக்கை என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.
- சக்திவேல், மின்னஞ்சல் வழியாக…