

கிராமியக் கலைகளின் அழிவுக்கான காரணங்களை அ.கா. பெருமாள் சமூக அக்கறையுடன் குறிப்பிட்டுள்ளார்.
சாதி இறுக்கம் மற்றும் முரண்பாடுகள், கிராமியக் கலைஞர்களின் அரசு சலுகைகள்குறித்த விழிப்புணர்வின்மை, அரசு விருதுகளில் கிராமியக் கலைஞர்களுக்குக் காட்டப்படும் பாரபட்சம், நிரந்தர வருமானமின்மையால் வேறு தொழிலுக்கு மாறுதல், குடிப்பழக்கம் போன்றவற்றை மிகச் சரியாகச் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
கிராமியக் கலைகளைக் காப்பாற்ற அரசுதான் தீவிர முயற்சி மேற்கொள்ள வேண்டும். இசைக்கும் விளையாட்டுக்கும் பல்கலைக்கழகங்களை உருவாக்கியிருப்பதைப் போல் கிராமியக் கலைகளுக்கும் பல்கலைக்கழகங்களை அரசு தோற்றுவிக்க வேண்டும்.
அனைத்துக் கிராமியக் கலைகளும் அங்கு பயிற்றுவிக்கப்பட வேண்டும். கிராமியக் கலைகளில் படிந்திருக்கும் சாதியக் கூறுகளைக் களைந்தெடுக்க வேண்டும். கிராமியக் கலைகளை மேன்மையடையச் செய்ய வேண்டும்.
அரசுப் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என எல்லாப் பள்ளிகளிலும் மாணவர் விரும்பும் ஏதேனும் ஒரு கலையையாவது பயில அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அம்முயற்சி மாணவர்களின் மனத்தையும் உடலையும் நலத்துடன் வைத்துக்கொள்வதுடன் நம் பண்பாட்டையும் மாணவர்கள் அறிந்துகொள்ள உதவும்.
மேலும், செம்மொழி நிறுவனம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தமிழ் வளர்ச்சி இயக்ககம் போன்ற தமிழாராய்ச்சி சார்ந்த நிறுவனங்களிலும் கிராமியக் கலைகள்குறித்த பயிலரங்குகளையும் சான்றிதழ் படிப்புகளையும் தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நடத்த அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இதன் மூலம் நாம் இழந்துவரும் நம் உன்னதமான கலைகளைக் காப்பாற்றலாம். இல்லையென்றால், வருங்கால சந்ததிகள் நம்மைத் தூற்றவே செய்யும்!
- யாழினி முனுசாமி,தமிழ்த் துறைப் பேராசிரியர், எஸ்.ஆர்.எம். கலை அறிவியல் கல்லூரி.