

ஆண், பெண் உறவுகளை மையமிட்ட உளநிலைப் போராட்டத்தை மையமாகக் கொண்ட பாத்திரங்களைப் பேசவிட்டு உணர்ச்சிகரமான, தேர்ந்த மொழிநடையால் புதினங்கள் படைத்தவர் தி.ஜானகிராமன். தனது படைப்புகளால் கும்பகோணம் மண் மீது வாசகர்களுக்குக் காதலை உண்டாக்கியவர்.
அவரது மோகமுள் தைத்து அதன் ரணத்திலும் அது ஏற்படுத்திய மணத்திலும் சிக்கி இன்னும் வெளியே வராத தீவிர வாசகர்கள் இன்னும் உண்டு.
அவரது யமுனாவைப் போல் பெண் வேண்டும் என்று கடைசிவரை திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்ந்தவர்கள்கூட உண்டு. அவரது அம்மா வந்தாள், மரப்பசு போன்ற புதினங்கள் இன்றும் முதுநிலைத் தமிழ் வகுப்புகளில் சிக்மண்ட் பிராய்டுவின் உளநிலைக் கோட்பாடுகளை விளக்க உதவிக்கொண்டிருக்கின்றன.
மென்மைத் தன்மையும் எதையும் நுட்பமான அழகியல் சித்திரங்களாய்த் தீட்டும் அவர் எழுத்து நடையும் வாசகனை இன்னும் வியப்பில் ஆழ்த்துகின்றன. சிக்கல்களின் திடமுடிச்சுகளைச் சுலபமான வாக்கியங்களால் தீர்த்துக்கொண்டே புதினங்களை நடத்திச்செல்லும் திறன் அற்புதமானது.
தி.ஜா. மரபின் வேர்களில் கிளம்பிய விருட்சத்தில் புதுமைக் கனிகளைத் தந்தவர். காவிரியை அன்போடும் ஏக்கத்தோடும் பார்த்து ரசிக்கின்றன தி.ஜா-வின் பாத்திரங்கள். நதியை யார்தான் வெறுப்பார்? தி. ஜானகிராமனும் உண்மையில் கதைக் காவேரிதான்.
- முனைவர் சௌந்தர மகாதேவன், திருநெல்வேலி.