

துரித உணவுகளின் தீமை குறித்து எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் மக்கள் அதன் சுவைக்கு அடிமையாகிவிட்டனர். அதிலிருந்து மீள்வது சிரமம்தான். சிலருக்கு இரவில் புரோட்டா சாப்பிட்டால் தான் அன்றைய தினம் திருப்தியாக இருக்கும். சில இளைஞர்கள் சாப்பிட்டு முடித்தவுடன் குளிர்பானம் அருந்துவதை நாகரிகமாகக் கருதுகிறார்கள். தாகத்தைத் தணிக்க உடலுக்கு தீமை விளைவிக்காத மோர், இளநீர் குடிப்பதை விட்டுவிட்டு பாட்டிலில் அடைத்த குளிர்பானங்களைக் குடிப்பது வழக்கமாகிவிட்டது. நாவுக்கு அதீத சுவை தரும் உணவுகளில் பல உடலுக்கு தீங்கு விளைவிப்பவைதான். சுவைக்கு அடிமையானால் நோய்க்கும் அடிமையாக வேண்டியதுதான்.
- ரா.பொன்முத்தையா,தூத்துக்குடி.
***
‘விஷம்… சாப்பிடாதீர்கள்’ கட்டுரை படித்தேன். இன்றைக்கு எதைச் சாப்பிடுவது எதைத் தவிர்ப்பது என்பதே தெரியாத அளவுக்கு நம்முடைய உணவுப் பழக்க வழக்கம் மாறிவிட்டது. நேரமின்மை, சோம்பல் போன்ற காரணங்களால் துரித உணவுகளை மக்கள் நாடத் தொடங்கி பல ஆண்டுகள் ஆகிவிட்டன. மக்கள் தொகைப் பெருக்கத்தின் காரணமாக விளைநிலங்கள் சுருங்கி விட்டன. பூச்சிக்கொல்லி மருந்துகள், ரசாயன உரங்கள் கலக்கப்பட்ட கலந்த உணவுகளும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. குளிர்சாதனப் பெட்டிகளில் உணவுப்பொருட்களை வாரக்கணக்கில் வைத்திருந்து உண்பதும் நம்மிடையே பழக்கமாகி விட்டது. ஆனால், இந்த அபாயங்களை மக்கள் உணர்ந்து கொண்டதாகத் தெரியவில்லை.
-மு.க. இப்ராஹிம் வேம்பார், தூத்துக்குடி.