

ஐஐடி என்றால் எல்லோருக்கும் மேலானவர்களா?’ என்ற டி.எம். கிருஷ்ணாவின் கட்டுரை படித்தேன்.
புராணங்களை அறிவியலுக்கு அளவுகோல்களாக வைக்கும்போது, ஒரு அறிவியல் மாணவர் எப்படி எந்தவிதமான கருத்தும் தெரிவிக்காமல் இருக்க முடியும். அரசியல்ரீதியான கருத்துகளுக்கு அரசியல்ரீதியாகத்தானே பதிலளிக்க முடியும். எந்தத் துறையைச் சார்ந்தவரானாலும் ஒருவர் தனது கருத்தைப் பிரச்சாரம் செய்வதும் அதற்கு ஆதரவு திரட்டுவதும் ஒரு நாகரிக சமூகத்தில் நடைபெற வேண்டிய ஆரோக்கியமான செயல்களாகும்.
ராணுவம் போன்ற சில குறிப்பிட்ட துறைகளில் கருத்துப் பிரச்சாரத்துக்கு எதிரான கட்டுப்பாடுகளை அரசுகள் உருவாக்குகின்றன.
ஆனால், அத்தகைய துறைகளிலும் வெளிப்படுத்தப்படாமல் தனி நபர்களுக்குள் உருவாகி வளரும் கருத்துகளையோ மறைமுக நோக்கங்களையோ நாம் தடுத்துவிட முடிவதில்லை. பல்வேறு நாடுகளில் ஏற்பட்ட ராணுவப் புரட்சிகளே இதற்குச் சான்றுகள்.
எனவே, ஐஐடி கல்வி நிறுவனங்களில், தங்கள் அரசியல் கருத்துகளை வெளிப்படுத்தும் குழுக்களைத் தவிர்த்த மற்றவர்கள் அனைவரும் அரசியல் கருத்துகள் எதுவும் இல்லாதவர்கள் என்றும் எந்தச் சார்புடனும் செயல்பட மாட்டார்கள் என்றும் யாரும் உத்தரவாதம் கொடுத்துவிட முடியாது.
ஒரு குழு வெளியிடும் கருத்துகள் சமூகத்தின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு உதவாது என்று மற்றொரு குழு கருதுமானால், அந்தக் கருத்துகளை தர்க்கரீதியாக மறுத்து, தனது குழுவின் கருத்துகள்தான் சமூக மேம்பாட்டுக்கு உதவும் என்பதை நிரூபிக்க முன்வர வேண்டும். அதை விடுத்து, அடுத்தவர்களின் கருத்துச் செயல்பாடுகளைத் தடை செய்ய மறைமுகமாக முயல்வது என்பது சமூக வளர்ச்சிக்கு ஒருபோதும் உதவப்போவதில்லை.
- மருதம் செல்வா,திருப்பூர்.