எனக்கு நோமோ ஃபோபியா இருக்குமோ?

எனக்கு நோமோ ஃபோபியா இருக்குமோ?
Updated on
1 min read

‘தொடுதிரை அடிமைகள்’ படித்தேன். நம் அனைவருக்கும் நோமோ ஃபோபியா இருக்குமோ என்ற ஐயம் உள்ளது.

நாம் நமது குழந்தைகள் கையில் கைபேசியைக் கொடுத்துப் பழக்கப்படுத்திவருகிறோம். பல நேரங்களில் குழந்தையிடமிருந்து கைபேசியை திரும்ப வாங்கும்போது அழுது அடம்பிடிக்க ஆரம்பித்துவிடுகிறது.

சமாதானப்படுத்துவதற்கு மீண்டும் கைபேசியைக் குழந்தையின் கையில் கொடுக்க வேண்டிய சூழ்நிலைக்கு ஆளாக்கப்படுகிறோம்.

இது தேவையா? ‘‘என் குழந்தைக்கு டி.வி. போட்டுவிட்டால் போதும்… அதைப் பார்த்துக்கொண்டே அடம்பிடிக்காமல் இருப்பான்” என்று பெருமையோடு கூறும் தாய்மார்கள் ஏராளம்.

குழந்தைகளை நாமே இப்படி டி.வி-க்கும் கைபேசிக்குமான அடிமை மனநிலையில் வளர்த்தால், பின் எப்படி வருங்காலச் சந்ததியினர் கைபேசி, டி.வி-யின் ஆதிக்கமின்றி இருப்பார்கள்?

- கே. சிராஜுதீன், முசிறி.

***

தொடுதிரை அடிமைகள் கட்டுரை அருமை. ‘ஏகலைவன் இன்றிருந்தால் கட்டை விரலைக் கொடுக்கச் சம்மதித்திருக்க மாட்டான். காரணம், அவனிடம் ஸ்மார்ட்போன் இருப்பதால்’ என்று ஒரு நறுக்கு. அதுபோல ஸ்மார்ட்போனை கால் மணி நேர இடைவெளியில் எடுத்துப்பார்த்தால்தான் இன்று இளைஞர்களுக்கு நிம்மதி ஏற்படுகிறது.

யாரேனும் அழைத்திருப்பார்களோ, லைக் இட்டவருக்கு மறுமொழி இட வேண்டுமே என்றும், இன்றைய ட்விட்டர் ஹேஷ்டேகில் நாமும் கருத்தைப் பதிவுசெய்ய வேண்டுமே என்ற உந்துதலும் ஸ்மார்ட்போனை அதிகம் கவனிக்க வைக்கின்றன. ஓய்வுநேரம் கிடைத்தால் குடும்பத்தாருடன் பேசுவதில்லை.

ஃபேஸ்புக்கில் முகம் தெரியாத நண்பரை நேசிக்கும் அளவுக்குச் சக மனிதரை நேசிக்காதது வேதனைக்குரியது.

- ப. மணிகண்டபிரபு, திருப்பூர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in