

உணவே மருந்து என வாழ்ந்த நாம், இன்று மருந்தே உணவு என்று மாறியது காலக் கொடுமைதான்.
சமையலறை அஞ்சறைப் பெட்டியில் வெந்தயம், சீரகம், மிளகு என்று வைத்துப் பழகிய நாம் இன்று பீசா, பர்க்கர், நூடுல்ஸ் என்று மாறிய பிறகு நோயாளிகளாய் மாறத்தொடங்கினோம்.
மகத்தான சித்த மருத்துவம் நமதென்பதை மறந்துவிட்டு, வேக உணவுகளை உண்டு சோகத்தைத் தேடிச் சுகமிழந்து தவிக்கிறோம். பழைய சாதத்துடன் வெங்காயம் வைத்துச் சாப்பிட்ட நாம், உலக மயமாக்கலினால் மென்பானங்களை அருந்தி, மைதா உணவுக்குள் தொலைந்துபோனோம்.
தூய்மையான பசு நெய் சேர்த்து உண்ட நாம் வனஸ்பதிக்கு மாறியது முரண்தான். மண்ணுக்கும் உணவுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. அந்தந்த மண்ணோடு தொடர்பில்லா எந்த உணவும் அந்த மண்ணைப் பொறுத்தவரையில் அதுவும் ஒரு விஷம்தான். உணவு முறைகள்குறித்தும் அழகான வாழ்வு முறைகள்குறித்தும் ஆசாரக் கோவையும் இன்ன பிற நீதிஇலக்கியங்களும் விளக்கியுள்ளன. இளநீரை மென் பானங்கள் பதிலீடு செய்தன. மண் பானை நீரைக் குளிர்பதனப் பெட்டிகள் பதிலீடு செய்தன.
வசம்பு வளர்த்த பிள்ளைகளை கிரேப் வாட்டர்கள் வளர்க்கின்றன. காகிதக் கோப்பைகளை நமதாக்கி பித்தளை டபரா, டம்ளர்களைத் தள்ளிவைத்தோம். கருப்பட்டியைச் சீனியால் பதிலீடு செய்தோம். சுக்கும், மிளகும் திப்பிலியும் நாமறியாச் சொற்களாயின. செயற்கை இயற்கையைத் தின்றது. விளைவு நோஞ்சான் ஆனோம்.
- முனைவர் சௌந்தரமகாதேவன்,திருநெல்வேலி.