

இனியாவது அரசியல் நடக்குமா? கட்டுரை மிகப் பிரமாதம். ‘அரசியல் சண்டைகளை எப்போதும் அரசியல் களத்தில்தான் வைத்துக்கொள்ள வேண்டும்’ என்று சொல்வார்கள். அதை இந்தக் கட்டுரை மிக அழகாக எடுத்துக் கூறியிருக்கிறது.
திமுகவுக்குத் தனது பலம் தெரியாமல் குழம்பிக்கொண்டிருக்கிறது. கடந்த 15 அல்லது 20 ஆண்டுகளில் புதிதாக இளம் வாக்காளர்கள் சேர்ந்துகொண்டிருக்கிறார்கள். அவர்கள் விரும்புவது நன்கு ஆள்கின்ற திறமையான ஆட்சியையே. ஓர் ஆட்சியை மாற்றக்கூடிய பலம் இவர்கள் கையில் இருக்கிறது.
இவர்கள் ஒன்று திரண்டால்/இவர்களை ஒன்று திரட்டினால் கடந்த காலத் தேர்தல்களிலான ஓட்டுக் கணக்கு அர்த்தமற்றதாகிவிடும். திமுக தனித்து நின்று 234 தொகுதிகளிலும் போட்டியிட்டால், ஆட்சியைப் பிடிக்க முடியும் என்கிற அளவுக்கு அவர்களுக்குக் கட்சிக் கட்டமைப்பு உள்ளது. கட்சி ஊழியர்களும் உள்ளனர். கூட்டணி சேர யார் வருவார் என்று திமுக காத்திருப்பது போன்ற தோற்றம் அக்கட்சி மீதான மதிப்பை உயர்த்துவதாகவும் இல்லை.
ஜெயலலிதா வழக்கை முற்றிலும் மறந்து ஆட்சியைப் பிடிப்பதுதான் முக்கியம் என்ற முனைப்பு திமுகவுக்கு ஏற்படாத வரை அந்த உறைநிலை நீடித்துக்கொண்டிருக்கும்.
- என். ராமதுரை, சென்னை.
***
‘இனியாவது அரசியல் நடக்குமா?' கட்டுரையில் தெரிவிக்கப்பட்டிருக்கும் கருத்துகள் மிகவும் சரியானவை. மக்கள் மன்றம்தான் தவறு செய்யும் அரசியல் தலைவர்களுக்குத் தக்க பாடம் புகட்ட வேண்டும்.
இது புரியாத தமிழக எதிர்க் கட்சிகள் இன்னும் நீதிமன்றத் தீர்ப்பையே விமர்சித்துக்கொண்டும் கர்நாடக அரசு மேல்முறையீடு செய்யுமா என்று காத்துக்கிடப்பதும் அதிமுக அரசுக்குச் சாதகமான செயல் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
- ஆ. முஹம்மது அஸ்லம்,உத்தங்குடி.