

மனுஷ்ய புத்திரன் எழுதிய ‘நாற்காலிக்கும் சக்கர நாற்காலிக்கும் இடையே...' கட்டுரை படித்தேன். ‘25 நிமிடங்களில் மதுரையிலிருந்து சென்னைக்கு வந்துவிட்டேன். ஆனால், என் இருக்கையிலிருந்து சக்கர நாற்காலிக்கு மாற 35 நிமிடங்கள் காத்திருக்க வேண்டியிருக்கிறது' என்ற வரியைவிட மாற்றுத்திறனாளிகளின் மனவேதனையை வேறு வார்த்தைகளில் பதிவு செய்துவிட முடியாது.
மாற்றுத் திறனாளிகளுக்கு வான்வழிப் பயணம் மட்டுமல்ல, தரைவழிப் பயணமும் வேதனையானதாகவே உள்ளது. தமிழக அரசு, அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் மாற்றுத் திறனாளிகளுக்குக் கட்டணச் சலுகை வழங்குகிறது.
அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் அதுவும் விரைவுப் பேருந்துகளில் ஏறினாலே ‘சார், பாஸா? தயவுசெய்து இறங்கிடுங்க' என்கிறார்கள், ஒரு சில நடத்துநர்களைத் தவிர பெரும்பாலானோர். சலுகைக் கட்டணத்தில் பயணிக்க முற்படும் பயணிகள் நிலை மனம் நோகச்செய்கிறது.
இந்நிலை மாற வேண்டும். அப்போதுதான் மாற்றுத்திறனாளிகளின் மனம் மகிழும் பயணம் சாத்தியப்படும். அதுவரை ஒவ்வொரு மாற்றுத்திறனாளியும் மனுஷ்ய புத்திரனைப் போல் மனதளவில் கஷ்டப்படுவதைத் தவிர்க்க முடியாது.
உடல் ஊனத்தால் ஏற்படும் மனவேதனையை விட, நான் மாற்றுத்திறனாளி என தன்னிலை விளக்கம் கொடுத்து சலுகையைப் பெறுவது மிகுந்த வேதனையானது.
- ச.கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.