

அ.கா.பெருமாளின் ‘விதைநெல்லும் நாற்றங்காலும்’ கட்டுரை, என் பள்ளி ஆசிரியர் இரா.காளியண்ணனை நினைவூட்டியது.
எட்டாம் வகுப்பு வரை நான் கல்வியில் ஓரளவே ஆர்வம் கொண்டவன். பள்ளி தாண்டி எதுவுமே தெரியாது. கசப்பாக இருந்த ஆங்கில மொழியை இனிப்புடன் கற்றுக்கொடுத்தவர் அவர்.
பள்ளி நேரம் தவிர்த்த பிற நேரங்களிலும், விடுமுறை நாட்களிலும் தன் வீட்டில் எங்களுக்குத் தனியாகவும் சொல்லிக் கொடுப்பார். பள்ளிப் பாடங்கள் தவிர்த்து, உலக அறிவை வளர்க்கும்படியான கருத்துக்களையும் பகிர்ந்துகொள்வார். பெரியாரியக் கருத்தியலைச் சார்ந்தவரான அவர் வழியேதான் திராவிடர் கொள்கைகள் அறிமுகமாகின.
பள்ளிக் கல்வியோடு வாழ்க்கைக் கல்வியை இணைத்தவரும் அவரே. பொருளாதாரச்சூழல் காரணமாக நான் மேல்நிலைக் கல்விக்குத் தயங்கி நின்றபோது காளியண்ணனே அதற்கான உதவியும் செய்தார். இப்போது அவர் ஓய்வுபெற்றுவிட்டார். இன்றளவும் அவரைச் சந்தித்துப் பேசுவதை அரிய பேறாகக் கருதுகிறேன்.
- முருகவேலன்,கோபிசெட்டிபாளையம்.
***
அரசுப் பள்ளிகளின் சாதனைச் சிகரங்களைப் பற்றிக் கல்வியாளர்கள் எழுதும் கட்டுரை தொடர்ச்சியாக தமிழ் ‘தி இந்து’வில் வெளிவந்து கொண்டுள்ள நிலையில், தற்போது வெளியாகியுள்ள பத்தாம் வகுப்புத் தேர்வில், அரசுப் பள்ளி மாணவர்கள் நாங்களும் தனியார் பள்ளி மாணவர்களுக்குச் சற்றும் சளைத்தவர்கள் அல்ல என்பதை 19 மாணவர்கள் முதல் மூன்று இடங்களைப் பிடித்து நிரூபித்துள்ளனர், ‘தி இந்து’வின் கட்டுரைகளுக்குப் பெருமை சேர்க்கும் விதமாக. சாதாரண மாணவர்களையும் சாதனை மாணவர்களாக மாற்ற அரசுப் பள்ளிகளும் சரியான இடம்தான் என்பதை எல்லோரும் புரிந்துகொண்டிருப்பார்கள் என நம்புவோம்!
- விஜய் ஆனந்த் சிதம்பரம்,அரூர்.
***
மகத்தான வெற்றி
பத்தாம் வகுப்புத் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்கள் 19 பேர் முதலிடம் பெற்றுத் தேர்ச்சி பெற்றதும், அதிகம் பேர் மிக நல்ல மதிப்பெண்களைப் பெற்றுத் தேர்வானதும் மகிழ்ச்சிக்குரிய ஒன்று.
ஏற்கெனவே வரையப்பட்ட ஒரு கோட்டைச் சிறிதாக்க வேண்டுமெனில், அதன் பக்கத்திலேயே அதை விடப் பெரிதாக இன்னொரு கோடு வரைந்துவிட வேண்டும் என்பார்கள்.
அரசுப் பள்ளிகளுக்கு எதிராக அவ்வாறு வரையப்பட்ட இன்னொரு பெரிய கோடுதான் தனியார் பள்ளிகள். கற்றலும் கற்பித்தலும் இதய சுத்தியோடும், ஆத்ம உணர்வோடும், எங்கு போதிக்கப்பட்டாலும் அது நிறைந்த பலனைத் தரும் என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டுத்தான் அரசுப் பள்ளி மாணவர்களின் இந்த வெற்றி.
- கே.எஸ்.முகமத் ஷூஐப்,காயல்பட்டினம்.
***
அறிவுத் தேடல்கூடம் வகுப்பறை!
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வின் வரலாறு காணாத சாதனைக்கு சமச்சீர்க் கல்வி பாடத்திட்டத்தின் எளிமைதான் காரணம் என்பதை ஏற்க இயலாது. கடினமான பாடத்திட்டத்துக்கு எளிமையான வினாத்தாளும் எளிமையான பாடத்திட்டத்துக்குக் கடினமான வினாத்தாளும் தயாரிக்க முடியும்.
இச்சாதனையைக் கொண்டாடும் வேளையில், தேர்ச்சி பெறத் தவறி உயிரை மாய்த்துக்கொண்ட மாணவிக்கு அஞ்சலி செலுத்துவதுடன், தோல்வியுற்ற ஏறக் குறைய ஒரு லட்சம் மாணவரது விடைத்தாள்களை மறு ஆய்வு செய்து அவர்களது தோல்விக்கான காரணங்களை அறிய முற்பட வேண்டும்.
பின்லாந்து நாட்டில் பள்ளிகளில் தேர்வு இல்லாமல் உலகத் தரமான கல்வியை அளிப்பதுபற்றி ‘தி இந்து’வில் (மே 21) வந்துள்ள கட்டுரை அனைவரது சிந்தனையையும் கிளற வேண்டும். தேர்வு அச்சமே மாணவரைக் கற்றலில் ஈடுபட வைக்கும் என்ற பொய்மையினின்று விடுபட்டு, வகுப்பறைக் கற்றல்-கற்பித்தல் சூழலை மேம்படுத்த முற்படுவோம். தேர்வுக்கு மாணவரை ஆயத்தப்படுத்தும் முறையினின்று விலகி, உண்மையான அறிவுத் தேடல்கூடமாக நமது வகுப்பறைகள் மாற வேண்டும்.
-ச.சீ. இராஜகோபாலன்,கல்வியாளர், சென்னை.