

‘நம் கல்வி… நம் உரிமை! தலைப்பில் மிகவும் அற்புதமான விவாத மேடையை உருவாக்கியிருக்கும் ‘தி இந்து’வை எத்தனை பாராட்டினாலும் தகும். மலை வாழை அல்லவோ கல்வி என்று பெண் குழந்தையைப் பார்த்துப் பாடினார் பாவேந்தர். அரிதாகக் கிடைப்பது, இனிமையாக வாய்ப்பது என்பதோடு, எந்த பந்தாவும் அற்ற பழமாகவும் இருப்பது மலை வாழை! மலை வாழைக்கு இன்று எத்தனை போலிகள் சந்தையில் கிடைக்கின்றன என்பதே போதும், கல்வி வர்த்தகத்தைப் பிரதிபலிக்க!
என் பாட்டனார் கே.சி. ராஜகோபாலன் வாலாஜாபாத் இந்து மத பாடசாலையில் தலைமை ஆசிரியராக ஊரே கொண்டாடும்படி பணியாற்றி மறைந்தவர். என் பள்ளிக் காலத்திலிருந்து இன்றுவரை, அரசுப் பள்ளிகளில் அர்ப்பணிப்போடு பணியாற்றும் பல நூறு ஆசிரியர்களைப் பார்த்துப் பூரித்தவண்ணம் நம்பிக்கையோடு கல்வியை அணுகப் பழகியிருக்கிறேன். நவீனத் தாராளமய காலத்தில் எல்லாவற்றுக்கும் விலை வைக்கப்படுகிறது. தெளிந்த நல்லறிவும் விலை பேசப்படுகிறது! வளைந்து கொடுக்காத, நேர்மையின் கம்பீரத்தோடு இயங்கும் மனிதர்களின் எண்ணிக்கை நிச்சயம் பெருகவே செய்யும்.
அதில், ‘தி இந்து’வின் இந்தச் செயல்பாட்டுக்குப் பெருமிதம் மிக்க பங்களிப்பு இருக்கும்.
- எஸ்.வி. வேணுகோபாலன், சென்னை.