

‘இனியாவது அரசியல் நடக்குமா?’ கட்டுரை படித்தேன். ஒரு குடிமகன் என்ற முறையில் நீதிமன்றத் தீர்ப்பைத் தீர்மானிக்கப் போட்ட கணக்கிலுள்ள குளறுபடிகளைக் கண்டும் காணாமல் விட்டுவிட முடியாது.
இது விஷயமாக சட்டம் தன் கடமையைச் செய்யும் என்று நம்புவோம். ஆனால், இந்திய தேசத்தில் புரையோடிவிட்ட ஊழலும் லஞ்சமும் முற்றிலும் அகற்றப்பட வேண்டும் என்று, அண்மைக் காலமாக மக்கள் இயக்கங்களும், நீதித் துறையும், நடுநிலை ஊடகங்களும் எடுத்த முயற்சிகள் என்ன ஆயிற்று? புதுடெல்லியில் ஆம்ஆத்மி வெற்றி பெற்றபோது இதே கருத்தை வலியுறுத்திய ஜனநாயகத்தின் இந்த மூன்று தூண்களும் இப்போது மௌனித்திருப்பதன் காரணம் என்ன? 1989-ல் நடந்த, பொது ஊழியரான கிருஷ்ணானந்த் அக்னிஹோத்ரியின் வழக்கின் தீர்ப்பை முன்னுதாரணமாக்கி, 10%வரை வருமானத்துக்கு அதிகமான ஊழல் வருமானத்தை ஏற்றுக்கொண்டு அனுமதிக்கலாம் என்கிற தீர்ப்பின் மூலம், பத்தில் ஒரு பங்கு ஊழல் செய்யலாம் என்கிற அங்கீகாரம் அனைவருக்கும் ஏற்புடையதுதானா? இந்தக் கேள்விக்கு நடுநிலையுடன் கடமையைச் செய்யும் ஊடகங்களே அறநெறியை எடுத்துச் சொல்ல வேண்டும்.
- கு.மா.பா. திருநாவுக்கரசு,சென்னை.