

கலை ாயிறு பகுதியில் வெளியாகியுள்ள ‘இரணியன் நாடகத்தின் புதிய எழுச்சி’ கட்டுரை மிகவும் அருமையாக உள்ளது. தமிழகத்தின் பல கிராமங்களில் வேரூன்றியிருக்கும் பல பழக்கங்கள் அழிந்துவிடாமல், தொடர்புச் சங்கிலிபோல வருங்காலத்திலும் தொடர்ந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.
இரணியன் கதை மட்டுமின்றி திரெளபதி துகில், கிருஷ்ணன் தூது, துரியோதனன் படுகளம் போன்ற நிகழ்வுகள்கூட இப்படிப்பட்ட சூழலைக் கொண்டுவரும் நாடகங்களாக இருக்கின்றன.
துக்கம் நடந்த வீட்டின் சார்பாக கர்ண மோட்சம் நாடகம் நடத்துவது ஒரு மரபு. நாடகம் முடிந்த பிறகு துக்கம் நடந்த வீட்டில் இந்த நாடகத்தின் கிருஷ்ணன் மோட்ச தீபம் ஏற்றுவது போன்ற நிகழ்வுகளும், அதற்கான பல ஆராதனைகளும் நடத்துவது இன்றும் வழக்கமாக உள்ளது.
இந்தக் கட்டுரையைப் படித்தபோது, கிராமத்தில் வாழ்ந்த நாட்களை அசைபோட வைத்தது. மழை வாசனை, மண் வாசனை, மலர் வாசனைபோல கிராமிய வாசனையும் தனித்துவமானது. ரோஜா மலர்களைக் கொடுக்கும் கைகளுக்குக் கூட ரோஜாவின் மணம் இருக்கும் என்பதுபோல, கிராமத்துக் கலைஞர்களால் கிராமங்களுக்குப் பெருமை. இப்பெருமை அரிதாகிவிடுமோ என்ற கவலையும் கூடவே வருகிறது.
க. லட்சுமிநாராயணன்,சட்டப் பேரவை உறுப்பினர், புதுச்சேரி.