

சிறார் தொழிலாளர் (தடுப்பும் கட்டுப்பாடும்) சட்டம் 1986-ல் திருத்தங்கள் மேற்கொள்வதற்கு இந்திய ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்திருப்பது தன்னிச்சையான, அதிகார வரம்புகளை மீறும் செயலாகும்.
மாநில அரசுகளைக் கலந்தாலோசிக்காமலும், இதுகுறித்து நாடு தழுவிய கலந்தாய்வுக்காக ஆய்வுக் குழு ஒன்றை அமைத்து முடிவெடுக்காமலும் சட்டத் திருத்தம் செய்வது அரசியல் சட்ட நெறிகளை அவமதிக்கும் செயலாகும்.
ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் உரிமைப் பிரகடனம் 18 வயது வரை உள்ள அனைவரையும் குழந்தைகள் என்று வரையறுக்கிறது. இக்குழந்தைகள் உரிமைப் பிரகடனத்தில் இந்தியாவும் கையெழுத்திட்டுள்ளது. எனவே, 18 வயது நிரம்பாத எவரையும் எந்தத் தொழிலையும் செய்யவைப்பது என்பது குழந்தை உரிமை மீறலாகும். வெறும் லாப நோக்கமுடைய சந்தைப் பொருளாதரக் கொள்கைகைகளுக்குக் குழந்தைகளைப் பலியிடுவது மிகப்பெரிய பாவச் செயலாகும்.
சத்தான உணவு, சுத்தமான நீர், பாதுகாப்பான இருப்பிடம், உடுத்தத் தேவையான உடை, ஆரோக்கியமாக வாழ்வதற்கான மருத்துவம், முன்னேறுவதற்குச் சமவாய்ப்பளிக்கும் கல்வி, மனித நேயமிக்க சமூக உறவு இவையெல்லாம் நமது நாட்டில் குழந்தைகளாக இருப்போரில் சரிபாதியினருக்கு இன்னும் கிடைக்கவில்லை என்பதை ஐ.நா. சபையின் குழந்தைகள் அமைப்பு தொடர்ந்து சுட்டிக்காட்டிவருகிறது.
எனவே, நமது நாட்டின் குழந்தைகள் எதிர்காலத்தில் நல்லதொரு மக்களாட்சி நெறியுடைய, குழந்தைகள் நெறியுடைய சமூக அமைப்பில் வாழ அவர்கள் மீது ஆட்சியாளர்கள் மிகுந்த அக்கறைகொள்ள வேண்டும்.
- சு. மூர்த்தி,ஆசிரியர், காங்கயம்.