

பேராசிரியர் தங்க.ஜெயராமனின் கட்டுரை படித்தேன்.
மொழியை ஒரு அறிவுத்தளக் கருவியாகக் கருதாமல், அதை ஒரு ஆதிக்க சக்தியாக மட்டுமே கருதியதால், அன்றைக்கு ஆங்கிலத்தின் மீது வெறுப்பு.
இன்றைக்கு ஆங்கிலத்தை எஜமானர்களின் ஏவல் மொழியாக எண்ணிப் போற்றுவதால் ஆங்கிலத்தின் மீது விருப்பு. இரண்டுமே அறிவுரீதியாக சிந்தித்து எடுக்கப்பட்ட முடிவு அல்ல. ஆங்கிலம் அல்லாத பிரெஞ்ச், ஜெர்மன் போன்ற மொழியைக் கற்றுக்கொள்பவர்களிடமும் இதே கண்ணோட்டம்தான் காணப்படுகிறது.
இன்றைக்கு ஆங்கிலம் பேசுபவர்களும் பயிற்சிரீதியாகத்தான் அதைக் கற்றுக்கொண்டு பேசுகிறார்களே தவிர, அந்த மொழியின் ஆன்மாவை உள்வாங்கிக்கொண்டு பேசுவதாகக் கொள்ள முடியாது. ஆங்கிலம் கற்க லண்டனுக்கோ, நியூயார்க்குக்கோ போக முடியாது.
ஆனால், ஷேக்ஸ்பியரையும், மில்டனையும், வால்ட் விட்மனையும் பைரனையும் நமது உள்ளத்தில் உள்வாங்கினால், லண்டன் வாழ் ஆங்கிலேயேரையும்விட நாம் அந்த மொழியில் அதிகத் தேர்ச்சி பெற்றவராகலாம். மொழியை அறிதலுக்கான ஒரு கருவி என்று எப்போது நாம் நினைக்கிறோமோ... அன்றைக்கு எல்லா மொழியும் நமக்கு வசமாகும்.
- கே.எஸ். முகமத் ஷூஐப்,காயல்பட்டினம்.