மரங்களிடம் பக்தி

மரங்களிடம் பக்தி
Updated on
1 min read

மனித இனம் தோன்றுவதற்கே மரங்கள்தான் காரணம் என்று சொல்லி, அதன் ஒவ்வொரு பரிணாம வளர்ச்சியையும் கே.என்.ராமசந்திரன் படம் பிடித்துக்காட்டியுள்ளார். புறநானூற்றில் ஒரு கன்னிப் பெண் புன்னை மரம் ஒன்றை வளர்க்கிறாள்.

அவளுக்குத் திருமணமான பின்னர் ஒரு பெண் குழந்தை பிறக்கிறது. அந்தக் குழந்தையிடம் “இந்தப் புன்னை மரம் உன்னுடைய தமக்கை” என்று சொல்லி வளர்க்கிறாள். அந்தக் குழந்தை வளர்ந்த பின்னர் தன் காதலனோடு பேசிக்கொண்டிருக்கும்போது “இந்தப் புன்னை மரத்துக்கு அருகில் இருந்து பேச வேண்டாம்.

இந்த மரம் என் தமக்கை என்று என் அம்மா சொல்லியிருக்கிறாள்” என்று சொல்லுவதாக ஒரு பாடல் உள்ளது. நம்மவர்கள் மரங்களோடு எவ்வாறு உறவாடியிருக்கிறார்கள் என்பதும், நமது பண்பாடு எத்தகையது என்பதும் இதன் மூலம் தெளிவாகிறது.

ஒரு முறை சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் ரசிகமணி டி.கே.சி ஒரு ஸ்காட்லாண்ட் பாதிரியாரிடம் பேசிக்கொண்டிருக்கும்போது, அந்தப் பாதிரியார் “நாங்கள் மரங்களிடம் அன்பு செலுத்து கிறோம்! நீங்கள் எப்படி?” என்று கேட்டிருக்கிறார்.

அதற்கு ரசிகமணி டி.கே.சி, “நாங்கள் மரங்களிடம் அன்பு செலுத்துவதில்லை. மாறாக, பக்தி செலுத்துகிறோம்! ஒவ்வொரு கோயிலிலும் தலவிருட்சம் என்று ஒரு மரத்தை வைத்து அதை வணங்குகிறோம்!” என்று சொல்லியிருக்கிறார். மரங்களைப் பாதுகாத்து வாழ்ந்த வாழ்க்கைக்கு இதைவிடச் சான்று வேண்டுமா என்ன?

- இரா. தீத்தாரப்பன்,மேலகரம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in