

சில தினங்களுக்கு முன் நடைபெற்ற ஆந்திர அரச பயங்கரவாதமும் தண்டகாரண்யப் பகுதியில் பசுமை வேட்டை என்ற பெயரில் நடைபெற்றுவரும் விவகாரங்களும் சரி, மேற்குத் தொடர்ச்சி மலைகளில் மாவோயிசத் தீவிரவாதம் பரவாமல் தடுக்க அரசு மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளும் சரி, சில ஆண்டுகளுக்கு முன்பு வீரப்பன் தேடுதல் வேட்டையின்போது கர்நாடக தமிழக அதிரடிப்படையினர் நடத்திய வெறியாட்டமும் சரி, ஒரு அடிப்படையான கேள்வியை எழுப்புகின்றன.
செம்மரம் வெட்டவும், சந்தன மரம் வெட்டவும், தீவிரவாதிகளோடு சேர்ந்து உயிரைப் பயணம் வைத்து ஆயுதம் தூக்கவும், மலை மக்களுக்கு பழங்குடியினருக்கு என்ன பைத்தியமா பிடித்திருக்கிறது?
உயிர் போகும் என்றும் தெரியும், கிடைக்கும் பலனும் பெரிதாக இல்லை என்பதும் தெரியும். வீரப்பனோடு சென்றவர்கள் என்று அதிரடிப்படையினரால் சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டவர்களில் ஒருவராவது கிழியாத கோவணத்தோடு இருக்கிறார்கள் என்று காட்ட முடியுமா?
கொல்வறுமை தாங்க இயலாததனுடைய விளைவுதான் மக்களை வேறு பக்கம் திருப்புகிறது.
சமவெளியில் வாழ்கிறவர்களுக்கு வாய்ப்புகள் பல உண்டு. மலை மக்களுக்கு நிலமே ஆதாரம். இன்று அவர்களிடத்தில் அது இல்லை. அவர்களது நிலங்கள் சமவெளிப் பகுதியினரால் அபகரிக்கப்பட்டுவிட்டன. நிலமற்ற மலை மக்கள் அனைவருக்கும் நிலம் வழங்கப்பட வேண்டும்.
அவர்கள் இழந்த நிலங்கள் மீட்கப்பட வேண்டும். இருக்கும் நிலங்கள் கைமாறாமல் தடுக்கப்பட வேண்டும். இது சட்டம் ஒழுங்குப் பிரச்சினை அல்ல; சமூகப் பொருளாதாரப் பிரச்சினை.
- பி.எல். சுந்தரம், எம்.எல்.ஏ.,பவானிசாகர் தொகுதி உறுப்பினர்.
***
இதுதானா ஜனநாயகம்?
அவர்கள் செம்மரக் கடத்தல்காரர்கள் என்று தெரிந்தால், அவர்களைப் பிடித்து நீதிமன்றத்தில் ஒப்படைப்பதுதானே காவல் துறையினரின் வேலை.
அவர்கள் குற்றவாளிகளாக இருந்தாலும்கூட, எந்த விசாரணையும் இன்றி அவர்களுக்கு மரண தண்டனை தர யார் இவர்களுக்கு அதிகாரம் கொடுத்தது?
இந்த மாதிரி என்கவுன்டர்கள் தொடர்ந்தால், எந்த ஒரு வழக்கிலும் காவல் துறை இதைப் போன்று என்கவுன்டர் நடத்திவிட்டு, அவர்கள் குற்றவாளிகள் அதனால்தான் கொன்றோம் என்று சொல்லிவிடலாமே!
அப்புறம் நீதிமன்றங்கள் எதற்கு? நீதிபதிகள் எதற்கு? ஒரு துப்பாக்கி போதுமே! இதுதானா ஜனநாயகம்?
- ஹெச். உமர் பாரூக்,வேடசந்தூர்.