

எதையும் மலினப்படுத்தாத யதார்த்தக் கலைஞன் எஸ். ராமகிருஷ்ணனின் நேர்காணல் அவர் முன்நிறுத்தப்பட்டிருக்கும் கண்ணாடியைப் போல் கதைச் சூழலை அப்படியே எதிரொலிக்கிறது.
தனக்குத் தானே முரண்பட்டு அதைத் தன் கதைவெளிக்குள் எள்ளிநகையாடிய உன்னதக் கதைக் கலைஞன் புதுமைப்பித்தனின் கதைகள் செவ்வியல் தன்மை கொண்டன.
வைக்கம் முகமது பஷீர் பெற்ற விதவிதமான அனுபவங்கள் அவர் படைப்பின் ஆணிவேராய் அமைந்து, அவர் படைப்புகளைத் தூக்கிநிறுத்தின.
அந்த அளவு அனுபவங்களைத் தமிழ்ச் சூழலில் புதுமைப்பித்தனும் ஜெயகாந்தனும் பெற்றிருந்தனர். செறிவான வாழ்க்கை நெருக்கடிகள் இல்லாமல் ஆழமான படைப்பை ஒரு படைப்பாளியால் தர இயலாது.
முழு செவ்வியல் நாவல் வராமல் போனதன் காரணம் அதுவாகக்கூட இருக்கலாம். வாசகர்கள் பொறுமையற்றவர்களாகவும், ஆழமான வாசிப்புப் பின்னணி இல்லாதவர்களாகவும் தரமான படைப்பாளிகளை அவர்கள் வாழும் காலத்தில் கொண்டாடத் தெரியாதவர்களாகவும் மாறிவிட்டார்கள்.
அதனால்தான், சிலஆயிரம் நூல்களை முழுமையாய் விற்கவே சில ஆண்டுகள் தேவைப்படும் நடப்புச்சூழலில் படைப்பாளர்களின் படைப்புக்கள் வெளிவருவதும் குறைந்துபோகிறது.
தொன்மைச் சிறப்புடைய மொழியில் இப்படி நேர்வது நல்லதன்று. நல்ல படைப்புகளைத் தேடி வாசிப்போம். பேட்டி கண்டவரின் கேள்விகள் புதிய வாசலைத் திறந்துவைத்தன. கலை இலக்கியம் நேர்காணல்களை ‘தி இந்து’ நூல் வடிவில் தர வேண்டும் என வேண்டுகிறேன்.
- முனைவர் சௌந்தர மகாதேவன்,திருநெல்வேலி.