

பொழுதுபோக்குகளில் ஊறித்திளைக்கும் இளைய சமுதாயத்தினருக்கு நடுவே, சமூக அவலங்களை எதிர்த்துப் போராடும் பொறுப்புமிக்க இளம் தலைமுறையினர் உருவாகி வருவதை வரவேற்க வேண்டிய கடமை நமக்கு உள்ளது.
பால் தாக்கரேவின் இறுதிச் சடங்குகளின்போது மகாராஷ்டிரம் முழுவதும் ஸ்தம்பித்தது. கடைகள் அடைக்கப்பட்டன, பேருந்துகள் இயக்கப்படவில்லை.
இதைத் தவறென்று கருத்து இணையத்தில் பதிவுசெய்த பெண் மற்றும் அக்கருத்தை விருப்பம் செய்த அவருடைய தோழி இருவரும் இணைய சட்டம் 66 (ஏ)வின் கீழ் கைது செய்யப்பட்டனர். இந்தப் பிரிவின்படி மாற்றுக் கருத்துக்களை முன்வைப்போர், அதை விருப்பம் செய்வோர், பகிர்வோர் என அனைவரும் எந்த விசாரணையும் இன்றிக் கைதுசெய்ய வழிவகை செய்கிறது.
இது ஜனநயகத்தின் குரல்வளையை நெரிக்கும் சட்டமாகும். செய்தி அறிந்த சட்டக் கல்லூரி மாணவி ஸ்ரேயா சிங்கால் உடனடியாகக் களத்தில் இறங்கினார். ஒரு மனுவை 2012-ல் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்து போராடினார். தொடர்ச்சியாக அரசியல் கட்சிகள் இச்சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தியதை உணர்ந்த உச்ச நீதிமன்றம், மூன்றாண்டுகள் கழித்து, இணைய சட்டத்தின் 66 (ஏ) பிரிவு அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது எனக் கூறி ரத்து செய்துள்ளது.
இதனால், இணையத்தின் சமூக ஊடகங்களில் மாற்றுக் கருத்துக்களை முன்வைக்கும் ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது. இளம் மாணவ சமுதாயத்தினர் சமூக அக்கறையுடன் இருக்க வேண்டும் என்பதற்கு ஸ்ரேயா சிங்கால் உதாரண மாணவி ஆகிவிட்டார்.
அவருக்கு ஒரு சபாஷ்! அவரது மக்கள் பணி தொடரட்டும். இதுபோன்ற செய்திகள்தான் மாணவ சமூகத்துக்கு ஜனநாயக விழிப்புணர்வை ஏற்படுத்தும்.
- ரெ. ஐயப்பன், சமூக அறிவியல் ஆசிரியர், காந்தியடிகள் நற்பணிக் கழகம்,கும்பகோணம்.