

அமெபேத்கரின் 125-வது பிறந்த நாள் கருத்துப் பேழை பகுதி சிறப்பான கருத்துகளை உள்ளடக்கியதாக அமைந்திருந்தது.
இந்திய சமூக அமைப்பு என்பது ஏற்றத்தாழ்வுகளையும் பாகுபாடுகளையும் சமூக விதியாகக் கொண்ட படிமுறைச் சாதியத் தொழில் அமைப்பாக காலம் காலமாக நீடித்து வந்துள்ளது.
பலவிதமான, நுட்பமான வேறுபாடுகளையும் பாகுபாடுகளையும் கொண்ட இப்படிப்பட்ட சமூக அமைப்பு உலகில் வேறு எந்த மானுட சமூகத்திலும் உருவாக்கப்படவில்லை. அனைத்து மக்களும் கண்ணியத்துடனும் மதிப்புடனும் வாழ்வதற்கான சமமான வாய்ப்புகளையும், உரிமைகளையும் பெறுவதற்கு வழிவகுக்காத எந்த ஒரு அரசியல் கொள்கையும் மக்களாட்சிக்கு எதிரானது.
இந்த உண்மையை பெரியார் உணர்ந்திருந்தார். அதனால்தான் உலகிலேயே மிகவும் பித்தலாட்டமான சொல் என்பது ‘மக்களாட்சி’ என்ற சொல்தான் என்று குறிப்பிட்டார்.
மிகப் பெரிய பொருளாதார ஆதிக்க சக்திகள்தான் இன்றைக்கு உலகளாவிய பொருளாதாரக் கொள்கைகளைத் தீர்மானிப்பவையாக இருக்கின்றன. உலக வர்த்தக அமைப்பு, உலக வங்கி, ஐ.நா. மன்றம் முதற்கொண்டு இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளின் நாடாளுமன்ற அவைகள் போன்றவை அவற்றுக்கு ஒத்திசைந்து செல்கின்றன.
ஜனநாயகத்தைக் காப்பதில் அக்கறையுள்ளவர்கள் நம்மைச் சுற்றி நடக்கும் எல்லா நடவடிக்கைகளையும் கவனத்தில் எடுத்துக்கொண்டே செயல்பட வேண்டும்.
- சு. மூர்த்தி, ஒருங்கிணைப்பாளர், கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு, திருப்பூர் மாவட்டம்.