

கருத்துச் சுதந்திரத்தை 66 (ஏ) எனும் ஆயுதம் கொண்டு குழிதோண்டிப் புதைத்த ஜனநாயகப் பிரதிநிதிகளின் செயலைக் கண்டித்து, இந்நாட்டுக் குடிமக்களின் கருத்துச் சுதந்திரத்தை உயிர்த்தெழச் செய்திருக்கிறது உச்ச நீதிமன்றம்.
மக்களின் விமர்சனங்களைக்கூடச் சகித்துக்கொள்ள முடியாத மற்றும் அவ்விமர்சனங்களைத் தங்களின் ஆக்கபூர்வமான செயல்களுக்குப் பயன்படும் ஊக்கியாக ஏற்றுக்கொள்ளத் தெரியாத நம்நாட்டு மக்கள் பிரதிநிதிகளை என்னவென்று சொல்வது?
மக்கள் தங்களுக்காக இயங்கும் ஆட்சியாளர்களின் செயல்பாடுகள், நாட்டில் நிகழும் நிகழ்வுகள் ஆகியவற்றைப் பற்றி அவரவரின் கருத்துகளைப் பகிர்ந்துகொள்ள அனுமதிக்காத ஆட்சிமுறை, சர்வாதிகாரத்தின் உச்சநிலை என்பது கூடவா இவர்களுக்குத் தெரியாது.
மக்களின் கருத்துதான் ஜனநாயகத்தின் உயிர்நாடி. அதன் சப்தநாடிகளையும் அடக்கி ஒடுக்குவது, சொந்தக் காசிலேயே சூனியம் வைப்பதற்குச் சமம். தக்க காலத்தில் இச்சட்டத்தைச் செயலிழக்கச் செய்த உச்ச நீதிமன்றம் குடிமக்களின் அடிப்படை உரிமையை உறுதிப்படுத்தியுள்ளது. இல்லையெனில், உலகம் நம்மைப் பார்த்துச் சிரித்திருக்கும்.
- ஜோ. செந்தில்நாதன்,கீழக்கரை.