

மறைந்த இசை முரசு நாகூர் ஹனீபாவுக்கு எச்.பீர்-முஹம்மதுவின் கட்டுரையை வெளியிட்டதன் மூலம் சிறப்பான அஞ்சலி செய்துவிட்டது ‘தி இந்து’ தமிழ் நாளிதழ்.
இசையை இஸ்லாம் ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும், இஸ்லாமியக் கருத்துகளையும் வரலாறுகளையும் நெறிமுறைகளையும் தனது சிம்மக் குரலோடு இணைந்த பாடல்களைப் பயன்படுத்தி, மக்கள் மனதில் ஆழமாகப் பதியச் செய்ததில் பெரும் வெற்றி கண்டவர் நாகூர் ஹனீபா.
அவரது ‘இறைவனிடம் கையேந்துங்கள்…’ என்ற பாடல் கைபேசியில் காலர்டியூனாகப் பயன்படுத்திக்கொள்ளும் அளவுக்குப் புகழ்பெற்றது. கர்நாடக இசையை முறையாகக் கற்காவிட்டாலும் தனது சிம்மக் குரலால் இஸ்லாமியத் தமிழ் இசையை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்றவர் நாகூர் ஹனீபா. தமிழ் முஸ்லிம்களின் இல்லத் திருமண நிகழ்வுகளில் நாகூர் ஹனீபா ‘வாழ்க வாழ்கவே…’ என்று மணமக்களை வாழ்த்திப் பாடிக்கொண்டிருப்பார்.
ஹனீபாவின் வாழ்த்துப் பாடல்கள் ஒலிக்காத இஸ்லாமியத் திருமண இல்லங்களே இல்லை எனலாம். நாகூர் ஹனீபா மறைந்துவிட்டாலும் அவரது பாடல்கள் இந்த உலகம் உள்ளளவும் ஒலித்துக்கொண்டே இருக்கும்!
- கே.பி.எச். முகம்மது முஸ்தபா,திருநெல்வேலி.