

‘வருங்கால வைப்புநிதி செலுத்துவது தொழிலாளர்களின் விருப்பத்தைப் பொறுத்தது’ என்ற மத்திய அரசின் கொள்கை முடிவு தவறானது என்பதை, அந்தத் துறையில் 30 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியவன் என்ற முறையில் பதிவுசெய்கிறேன்.
பெரும்பாலான தொழிலாளர்களின் வாழ்க்கையில் பி.எஃப். பணம் பணிக் காலத்துக்குப் பின்னர், எஞ்சிய காலத்தைத் தன்னம்பிக்கையுடன் கழிப்பதற்கும், குழந்தைகளின் நலனுக்காகச் செலவிடுவதற்குப் பயன்பட்டதையும் நெஞ்சுருக அவர்கள் விவரித்ததைப் பல முறை கேட்டிருக்கிறேன்.
பொதுவாக, அரசு ஊழியர்களுக்குக் கிடைக்கும் பல சலுகைகள் தனியார் நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்களுக்குக் கிடைப்பதில்லை. இவர்களுக்கு பி.எஃப்., இ.எஸ்.ஐ போன்றவை பெரிய வரப்பிரசாதம்.
இக்கட்டான சூழ்நிலைகளில் கைகொடுத்திருக்கிறது. இந்த அருமையான திட்டத்தை அவர்களது விருப்பம் என்று ஆக்கிவிட்டால், தற்காலிக வரவுக்காக வருங்காலப் பயன்களைக் கண்டிப்பாக இழக்க வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்படுவார்கள். பெரும்பாலான தொழிலாளர்களுக்கு பி.எஃப்-ஐ விட்டால் வேறு சேமிப்பு கிடையாது.
அதுவும் ‘கட்டாயமாக’ இருப்பதால்தான். மேலும், பி.எஃப். பணத்துக்குக் கொடுக்கப்படும் வட்டிவிகிதம், மாதாந்திரக் கூட்டு வட்டிக் கணக்கீடு இவை எந்த சேமிப்பைக் காட்டிலும் அதிக பயனுள்ளது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த ‘கட்டாயம்’ தளர்த்தப்பட்டால், இந்த நிதி பெரும்பாலும் மதுக் கடைகளுக்குத்தான் தாரை வார்க்கப்படும். அரசின் இந்த ‘விருப்ப’ அறிவிப்பு தொழிலாளர்களுக்கான சாபமே அன்றி; வரமில்லை!
- அ. பட்டவராயன்,திருச்செந்தூர்.