

‘இந்தியாவின் கவுரவம் எதில் இருக்கிறது?’ என்று கேள்வி கேட்டு, அதற்கு அடுத்த வரியிலேயே சாட்டையடியாக சமூகத்தின் ஆணாதிக்க மனத்தால்தான் நமக்குத் தலைக்குனிவு என்ற பதிலை அளித்திருப்பதன் மூலம், கட்டுரையாளரின் நியாயமான கோபம் தெரிகிறது.
பெண் என்பவள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதை, பாலியல் குற்றவாளியான முகேஷ்சிங் சொல்வதையெல்லாம் நாம் ஏற்றுக்கொண்டு அதற்குப் பதிலளித்துக்கொண்டிருக்கத் தேவையில்லை.
ஆனால், அவனது வார்த்தைகளில் தெரிந்த அந்த ஒருவித அலட்சிய மனப்பான்மை, சமுதாயத்தில் நிறைய ஆண்களிடம் இருக்கிறது.
பெண்களைத் தெய்வமாகப் போற்றும் நாடு இந்தியா. அதே இந்தியாவில், பெண்கள் விலங்குகளைவிட மோசமாக நடத்தப்படுகிறார்கள். இரண்டுக்கும் இடையே எவ்வளவு பெரிய முரண்பாடு. இதிலிருந்து வெளியே வர நாம் பயணிக்க வேண்டிய தொலைவு மிகமிக அதிகம்.
- வீ. சக்திவேல்,தே.கல்லுப்பட்டி.
***
இந்தியாவின் கவுரவம்
‘இந்தியாவின் கவுரவம் எதில் இருக்கிறது?’ என்கிற வாஸந்தியின் கட்டுரை படித்தேன். பாலியல் உணர்வுத் தூண்டல் வெளிப்படுவதிலும் அல்லது இதற்கு ஆட்படுவதிலும் ஆணுக்கும் பெண்ணுக்கும் உடலியல் சார்ந்தும், காலம் காலமாகக் கட்டமைக்கப்பட்டிருக்கும் ஆணாதிக்கக் கருத்தியல் சார்ந்தும் வேறுபாடுகள் இருந்துவருகின்றன. பாலியல் உணர்வுத் தூண்டலை ஆளுமை செய்வதில் ஆண் கட்டற்றவன், பெண் அடக்கத்தன்மை வாய்ந்தவள் என்ற சமூக உளவியல் அடிப்படையிலான கருத்தியல் பதிவு அனைவருடைய பொதுப்புத்தியிலும் உருவாக்கப்பட்டுள்ளது; குறிப்பாக, ஆண் பாலினரிடம் இது மேலோங்கியுள்ளது.
முகேஷ் சிங்கின் பேச்சுக்கு பாலியல் சார்ந்த இந்த ஆணாதிக்கக் கருத்தியல்தான் காரணம்.
“மரண தண்டனை விதிக்கப்பட்ட ஐவர் உட்பட, குற்றம்சாட்டப்பட்டவர் எல்லோருக்குமே தாங்கள் செய்தது தவறு என்று தோன்றியதற்கான அடையாளம் கொஞ்சமும் இல்லை’’ என்கிறார் ஆவணப்பட இயக்குனர் லெஸ்லீ உட்வின்.
ஆரோக்கியமான, முற்போக்கான, சமநீதியுடைய பாலியல் சார்ந்த புதியதொரு சமூக உளவியல் பண்பாட்டைக் கண்டறிந்து வளர்த்தெடுப்பது ஒன்றே, பாலியல் கொடூரங்களுக்கு நீண்டகால அளவிலான ஒரு தீர்வை நோக்கி இட்டுச்செல்லும். உலகமயமாக்கலின் நுகர்வியக் கலாச்சார உணர்வூட்டுதல்களால் ஊடகங்களில் ஆபாசத்தன்மையுடைய காட்சிப்படுத்துதல் மற்றும் கருத்துப் பரப்பல் அதிகரித்துவருகிறது. இந்தச் சூழல்கள் எல்லாப் பருவத்தினரையும் பாலியல் உணர்வுத் தூண்டல் வலைக்குள் விழவைக்கிறது. ஆவணப்படத்தைத் தடைசெய்வது என்பது அரசு இயந்திரத்தின் மீது நமக்கு மிகப் பெரிய கேள்வியையும் அவநம்பிக்கையையும் எழவைக்கிறது. அம்புகளைத் தடுப்பதைப் பற்றிப் பேசுவதோடு, வில்லை ஒடிப்பதைப் பற்றியும் பேச வேண்டுமல்லவா? இதைச் செய்வதில்தான் இந்தியாவின் கவுரவம் இருக்க முடியும்.
- சு. மூர்த்தி,கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு, திருப்பூர் மாவட்டம்.